தமிழகத்தில் திடீரென குறைந்த கொரோனா பரிசோதனை எண்ணிக்கை!
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான பரிசோதனைகளின் அளவு, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது என்று புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழகத்தில் கடந்த மே 11ஆம் தேதி இருப்பதிலேயே அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 798 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். அன்றையதினம் 11 ஆயிரத்து 584 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு இருந்தன.
இன்றைய தினம், அதாவது மே 16ஆம் தேதி, 477 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட நபர்கள் எண்ணிக்கை 8270.

புள்ளி விவரம்
11 தேதி பரிசோதனை செய்யப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இடையேயான விகிதம் 6.89. இன்றைய தினம் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் விபரம், விகித அடிப்படையில் 5.77 என்ற அளவில் உள்ளது. இதன்படி பார்த்தால், நேற்று மற்றும் நேற்றுமுன்தினம் ஆகிய இரு தினங்களும் பரவாயில்லை என்று சொல்லலாம். 15ஆம் தேதி, 10 ஆயிரத்து 883 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது 434 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது இது 3.99 சதவீதம்.

குறைவு
14ம் தேதி 11 ஆயிரத்து 773 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 447. அதாவது 3.80 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் அதிகபட்சமாக 14 ஆயிரத்து 102 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அன்று 580 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுபோன்ற எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், இப்போது பரிசோதனை எண்ணிக்கை மிகக் குறைந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

நபர்கள், சேம்பிள்கள்
இதில், ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அரசு வெளியிடக்கூடிய புள்ளி விவரத்தில், பரிசோதனை செய்யப்பட்ட நபர்கள் எண்ணிக்கை மற்றும் சேம்பிள் என்று இரண்டு விஷயங்கள் குறிப்பிடப்படுகிறது. பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடம், செய்யப்படும் பரிசோதனைகள், நபர்களின் பரிசோதனை என்ற பிரிவில் வருகிறது. அதில் யாருக்கு பாதிப்பு இருக்கிறதோ, அவருக்கு சிகிச்சை அளித்து குணமடைந்து வீடு திரும்பும்போது ஒருமுறை பரிசோதனை செய்கிறார்கள். எனவே, சேம்பிள் பரிசோதனை எண்ணிக்கை என்பது நபர் எண்ணிக்கையை விட சற்று அதிகமாக இருப்பது வாடிக்கை.

புதிய ரூல்ஸ்
இதில் மத்திய அரசு புதிதாக ஒரு விதிமுறையை கொண்டுவந்தது. லேசான காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று குணமடைந்து செல்வோருக்கு மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று அந்த விதிமுறை தெரிவிக்கிறது. மிக மோசமாக பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை மட்டும் பரிசோதனை செய்யுங்கள் என்கிறது. எனவே சேம்பிள் எண்ணிக்கையும் அனைத்து மாநிலங்களிலும் குறைய தொடங்கியது.

எண்ணிக்கை
இது புதிய விதிமுறை காரணமாக ஏற்படக்கூடிய மாற்றம். ஆனால் நபர்களுக்கு செய்யக்கூடிய பரிசோதனை எண்ணிக்கை குறைவது என்பது சரியான நடைமுறை அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த விஷயத்தில் மகாராஷ்டிரா அரசு அதிகப்படியான நபர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை செய்து அந்த விவரத்தை வெளியிட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.
|
மகாராஷ்டிரா அருமை
இதை பிரபல மருந்து நிறுவனமான, பயோகான் தலைவர் மஜூம்தார் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். எந்த மாநிலம் எல்லாம் குறைவாக பரிசோதனை செய்கிறதோ, அவர்கள் இப்போது வேண்டுமானால் பரிசோதனை முடிவுகளை வைத்து திருப்திப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், வருங்காலத்தில், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வகையில் மகாராஷ்டிராவின் செயல்பாடு பாராட்டத்தக்கது என்று கிரண் மஜூம்தார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications