திமுகவிற்கு குட்பை சொல்லும் ஓ பன்னீர் செல்வம்? பின்னணியில் தங்க தமிழ்செல்வன் எம்பியின் ஆதிக்கம்
சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் திமுகவில் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் விரைவில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில தான் ஓ பன்னீர் செல்வத்தின் இந்த முடிவின் பின்னணியில் திமுக எம்பி தங்க தமிழ்செல்வனின் ஆதிக்கம் தான் முக்கிய காரணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வந்தார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிய நிலையில் கடந்த பிப்ரவரி 27 ம் தேதி ஓ பன்னீர் செல்வம் தனது மகனும், முன்னாள் எம்பியுமான ரவீந்திர நாத் உடன், அப்போதைய முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

அதன்பிறகு சட்டசபை தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் திமுக சார்பில் மீண்டும் தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மகன் ரவீந்திரநாத் ஆண்டிபட்டி தொகுதியில் வாய்ப்பு கோரிய நிலையில் திமுக தலைமை மறுத்துவிட்டது.
இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் விரைவில் திமுகவை விட்டு முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. குறிப்பாக ஓ பன்னீர் செல்வம் தற்போதைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோரின் இந்த முடிவுக்கு பின்னால் கடும் அதிருப்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஓ பன்னீர் செல்வம், ரவீந்திரநாத் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். ஆனாலும் தற்போது வரை இருவருக்கும் திமுகவில் பதவி கொடுக்கவில்லை.
அதுமட்டுமின்றி இன்னொரு காரணமும் உள்ளதாம். அதுதான் திமுக எம்பி தங்க தமிழ்செல்வன். இவர் தற்போது திமுகவில் தேனி வடக்கு மாவட்ட செயலாளராகவும், தேனி நாடாளுமன்ற தொகுதி எம்பியாகவும் உள்ளார். இவரும் அதிமுக, அமமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானபோது ஓ பன்னீர் செல்வத்தை எதிர்த்து அரசியல் செய்தவர். இப்படியான சூழலில் தங்க தமிழ் செல்வனுக்கு ஓ பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்ததே பிடிக்கவில்லை என்று அப்போது கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்தின் வசம் தேனி மாவட்ட திமுக கட்சியின் நிர்வாகிகள் சென்று விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம். இதனால் கட்சியை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம். இதனால் ஓ பன்னீர் செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. தங்களுக்கு திமுக தலைமை தான் பொறுப்பு தரவில்லை என்றால் சொந்த மாவட்டமான தேனியிலும் மதிப்பு இல்லையே என்று அவர்கள் நினைத்து வருகின்றனர். இதனால் தான் ஓ பன்னீர் செல்வம், ரவீந்திரநாத் ஆகியோர் விரைவில் திமுகவில் இருந்து விலகி முதல்வர் விஜய்யின் தவெகவில் ஐக்கியமாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications
