இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டி.. அடித்து சொன்ன ஓபிஎஸ்! சூடுபிடிக்கும் லோக்சபா தேர்தல்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மட்டுமல்லாது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில், ஓபிஎஸ் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் உறுதியாக இருக்கிறார். பாஜகவுக்கும் இதில் லாபம்தான். ஏனெனில், கடந்த தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. ஆனால், தென் மாவட்டங்களில் ஓபிஎஸ், டிடிவி தினகரனின் செல்வாக்கு அதிக அளவில் இருக்கிறது.

எனவே ஓபிஎஸ்-ஐ உடன் வைத்திருப்பதன் மூலம் இந்த வாக்கு வங்கிகளை அள்ளலாம் என்பது பாஜகவின் மன கணக்கு. ஆனால், கடந்த சில நாட்களாக ஓபிஎஸ்-க்கு போதிய முக்கியத்துவத்தை டெல்லி தரப்பு கொடுக்கவில்லை என்று கவலையில் இருந்தது. காரணம் கடந்த இரண்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடியை தனியே சந்தித்து பேச ஓபிஎஸ் முயன்றிருக்கிறார். ஆனால், விமான நிலையத்தோடு இவரது தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது, அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்த ஓபிஎஸ்-க்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. இப்படி ஒரு பக்கம் அதிமுகவின் கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலையும், மறுபக்கம் டெல்லி தரப்பு சரியாக கண்டுக்கொள்ளா நிலையும் ஓபிஎஸ்-ஐ வாட்டியது. இருப்பினும் பாஜகவுடன் இணைந்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள அவர் தயாராக இருக்கிறார்.
இது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலையில் தான் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற நாங்கள் ஆதரவு அளிப்போம். வரும் 11ம் தேதி ஜே பி நட்டாவை சந்திக்கும் திட்டம் உள்ளது” என்று கூறியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்புகளின்படி அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலையில் ஓபிஎஸ் இருக்கையில், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று அவர் கூறியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications