மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! சசிகலா ‘திட்டத்தை’ கையிலெடுக்கும் ஓபிஎஸ்? கைகோர்த்த ‘வாரிசுகள்’!
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அதிகார போட்டியில் அடுத்தடுத்து பலத்த பின்னடைவுகளை சந்தித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சசிகலா பாணியில் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்களை சந்தித்து புரட்சி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன்களான ஜெயப்பிரதீப் மற்றும் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தேனியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழை விட்டாலும், தூரல் விடவில்லை என்பது போல மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவின் இரண்டாவது பொதுக் குழு கூட்டம் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் அதிமுகவின் ஒற்றை தலைமையாக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது தனக்குண்டான அதிகாரங்களை பயன்படுத்தி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கியதோடு, தனது ஆதரவாளர்கள் மற்றும் நெருக்கமானவர்களை கட்சியின் உயர் பதவிகளில் அமர்த்தி வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம்
அவர்களில் முதன்மையானவர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களாகவும், எதிர்கட்சி துணை தலைவராக தற்போது அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்பு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு ஆதரவாக நின்ற முன்னாள் எம்எல்ஏ செம்மலை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக திரும்பிவிட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி
மேலும் கட்சியில் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்தாலும் தொண்டர்களின் ஆதரவு தனக்குத்தான் இருப்பதாக காட்டிக் கொள்ள பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார் பன்னீர்செல்வம். ஆனால் அவை எதுவுமே கைகொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் தனக்கு தொண்டர்கள் ஆதரவு இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் கூறியிருந்தாலும் அவரது சொந்த மாவட்ட நிர்வாகிகளே ஒட்டுமொத்தமாக இபிஎஸ் தரப்புக்கு இருப்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

ஆதரவில்லை
தேனி மாவட்ட செயலாளர் சையது கானை தவிர தேனி மாவட்ட அதிமுக பொருளாளர் சோலைராஜ். தேனி மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ராமர். தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார். தேனி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் காளை, கம்பம் முன்னாள் எம்எல்ஏ ஜக்கையன், பெரியகுளம் செயலாளர் அண்ண பிரகாஷ் உள்ளிட்ட பலரும் இன்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இதனால் சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு ஆதரவில்லை என செய்திகளை பரப்பி வருகிறது எடப்பாடி தரப்பு.

புரட்சி பயணம்
இந்நிலையில் கடைசி அஸ்திரமாக தொண்டர்களை நேரில் சந்தித்து தமிழகம் முழுவதும் இருக்கும் ஆதரவு வட்டத்தை அனைவருக்கும் காட்ட வேண்டும் என பிரமாணம் எடுத்திருக்கிறார் ஓபிஎஸ். இதற்காக அவரது இரு மகன்களும் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் வரும் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளர் தான் எனக் கூறிவரும் சசிகலா டெல்டா மாவட்டங்களிலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் புரட்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது பாணியை பின்பற்றி தானும் இதே போல் நடத்தினால் தனக்கு இருக்கும் செல்வாக்கை எடப்பாடி தரப்பு அறிந்து கொள்ளும் என நினைக்கிறார் ஓபிஎஸ்
Recommended Video

தீவிர ஆலோசனை
மதுரையில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த புரட்சி பயணமானது, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் எனவும் மற்ற மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளை பொறுத்து அங்கு பயணம் மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. இதற்காக சில நாட்களாகவே ஓபிஎஸ் தரப்பில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும் இதுதொடர்பான பேச்சுகள் நடந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications