தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த கண்ணன்.. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறிய ஓபிஎஸ், சசிகலா
சென்னை: தீமைகளை ஒழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் , " தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்த பகவான் கிருஷ்ணர் அவதரித்த திருநாளை "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" என்றும் "கோகுலாஷ்டமி" என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் எனது இனிய "ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி" நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாபாரதப் போரின்போது அர்ஜூனனிடம் பகவான் கிருஷ்ணர் உணர்த்திய தர்மங்கள்தான் பகவத்கீதை என்னும் புனித நூல் ஆகும். "ஒருவரை சூழ்ச்சியில் வீழ்த்தினீர்கள் என்றால், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்களும் சூழ்ச்சியில் வீழ்த்தப்படுவீர்கள்", "ஒருவரின் நம்பிக்கையை பெறுவதென்பது எளிதானதல்ல, அவ்வாறு பெற்ற நம்பிக்கையை எந்தச் சூழலிலும் கெடாமல் பார்த்துக் கொள், என்றும் நம்பிக்கையுடையவனாய் இரு", "சிந்தனையில் வஞ்சம் புகுந்தால் நெஞ்சமது நிம்மதியை இழக்கும், சிந்தித்துசெயலாற்றுங்கள்", "ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை" என பல வாழ்க்கை நெறிமுறைகளை "பகவத் கீதை" என்னும் புனித நூல் உலகிற்கு எடுத்துரைத்து இருக்கிறது.

தர்மத்தை நிலைநாட்டிய கண்ணன்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்ததன் நோக்கமே இந்த உலகத்தில் உள்ள தீமைகளை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத்தான். இந்த நன்னாளில், நாம் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி தீமைகளை முறியடிக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும்; நாடெங்கும் தர்மம் தழைக்க வேண்டும்; "அமைதி, வளம், வளர்ச்சி" பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை அனைவருக்கும் உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா வாழ்த்து
இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பகவான் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நன்னாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை ஆர்வத்தோடும் மகிழ்வோடும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று வீட்டில் அழகிய வண்ணக் கோலங்களிட்டு, வாசலில் மாவிலை தோரணங்களைக் கட்டி, ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழவகைகள், பலகாரங்கள் போன்றவற்றை படைத்து, குழந்தைகளை கண்ணனைப் போல் அலங்கரித்து, குழந்தைகளின் பாதச் சுவடுகளை மாக்கோலத்தில் தங்கள் இல்லங்களுக்குள் பதித்து, அந்த குழந்தைக் கிருஷ்ணனே தங்கள் இல்லத்திற்கு வந்தது போல் மனதில் நினைத்து மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுவதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.நல்லோரைகாத்து, தீயோரை அழித்து, அறத்தை நிலை நிறுத்துபவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். எப்போதெல்லாம் தர்மம் அழிந்து போய் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் தோன்றுபவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

மகிழ்ச்சியோடு வாழவேண்டும்
இனம், மொழி, மதம் மற்றும் சாதியற்ற பாதையின் மூலம் பாமர மக்களுக்கு வாழ்க்கை முறையை வகுத்து கொடுத்து, துன்பத்தில் இன்பம் காண வைக்கும் ஞானரசமாம் பகவத் கீதையை இந்த உலகத்திற்கு உபதேசித்த பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் தீயவை அகன்று நன்மை செழித்து அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை மனதார வேண்டுகிறேன்.

தர்மத்தை நிலை நாட்டிட உறுதியேற்போம்
"குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலை நிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும் மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்வுடன் வாழ்ந்திடலாம்" என்ற ஸ்ரீகிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில் கொண்டு ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில், ஒவ்வொருவரும் துரோக சிந்தனைகளை விலக்கி, அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலை நாட்டிட உறுதியேற்போம் எனக் கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications