''இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம்! திமுக வெற்றிக்கு எடப்பாடி மறைமுக உதவி''! -மருது அழகுராஜ்
சென்னை: இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என்று கூறியுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகி மருது அழகுராஜ், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக உதவி செய்கிறார் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார்.
என்ன நான் சொல்றது என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள பதிவு வருமாறு;

திமுக தெம்போடு: ''தங்களுடைய வாக்கு வங்கியை உறுதிப்படுத்திய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இவற்றுடன் புதிதாக மக்கள் நீதி மையம் என ஒரு பலமான கூட்டணியோடும், கூடவே ஆளுங்கட்சி என்கிற அதிகார பலத்துடனும் திமுக தெம்போடு கொடி பிடித்து நிற்கிறது.''
''ஆனாலும் நடைபெற இருப்பது நாடாளுமன்ற தேர்தலாக இருப்பதால் பிரதமர் வேட்பாளராக யாரை குறிப்பிட்டு மக்களிடம் ஓட்டு கேட்பது என்கிற நெருக்கடியும் குழப்பமும் அக்கட்சிக்கு இருக்கிறது.''
எடப்பாடி கம்பெனி: ''அதே வேளையில் தங்களோடு இருந்ததில் பலமான கூட்டணி கட்சிகளான பா.ஜ.க, பா.ம.க போன்ற கட்சிகளையும் இழந்துவிட்டு பிளவுக்கு மேல் பிளவு எனும் பரிதாப நிலையில் அண்ணா தி.மு.க வை எடப்பாடி முன்னேற்ற கழகம் என்பதாக உருமாற்றிக் கொண்டு யாரை எதை எப்படி முன்னிறுத்தி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது என்பது புரியாமல் முட்டுச் சந்தில் விக்கித்து நிற்கிறது எடப்பாடியின் பைனான்ஸ் கம்பெனி.''
திமுக vs பா.ஜ.க : ''இதற்கு இடையில் தமிழகத்தில் நிலவும் இந்த புதியவகை அரசியல் களச் சூழலை பா.ஜ.க. தனக்கான பிரத்யேக வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு "மோடிக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பை தாருங்கள்" என்னும் வலுவான அஸ்த்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு தமிழக அரசியல் பூகோளத்தை திமுக vs பா.ஜ.க. என்பதாக கட்டமைக்க அக்கட்சி முயற்சிக்கும் எனத் தெரிகிறது.''
''இதற்கு ஏதுவாக ஓ.பி.எஸ், தினகரன், அன்புமணி, விஜயகாந்த், ஆகியோரை தன்வசப்படுத்தவும், ஏற்கனவே தங்களது நிலைய வித்வான்களான புதிய தமிழகம் கிருஷ்ணசாமி , இந்திய ஜனநாயக கட்சி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன், தேவநாதன்
யாதவ், ஜான்பாண்டியன் உள்ளிட்டோரை கொண்டு ஒரு சரவெடிக் கூட்டணியை அது கட்டமைக்க கூடும். ''
இரட்டை இலை சின்னம்: ''கூடவே இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் அதன்மூலம் இலைக்கு திரைபோட்டு தங்களது தாமரை பூவை மட்டுமே தமிழக மக்களின் பார்வையில் நிறுத்தும் முயற்சியும் முன்னெடுக்கப்படலாம். ஆனாலும் இரண்டரை வருட திமுக ஆட்சியின் மீதான எதிர்ப்பு வாக்குகள் ஒருபுறமாக திரண்டு விடாமல் பிரித்து தங்களது கொடநாடு கூட்டாளியான எடப்பாடி 2019 போலவே தங்களது அமோகமான அறுவடைக்கு உதவுவார் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறது திமுக.''
திமுகவுக்கு மறைமுக உதவி: ''ஆக, திடத்தோடு திமுக இருக்க, ஒரு கை பார்த்து விடுவது என்னும் தீர்கத்தோடு பா.ஜ.க புதுமுயற்சி எடுக்க, மூவர்ண கழகமான அண்ணா திமுகவோ எடப்பாடியின் சுயநல புதைசேற்றில் மூழ்கும் நிலையில் என்றால் இந்த விபரீத இக்கட்டை தடுக்கும் ஒரே ஆயுதம் பிளவுபட்டுக் கிடப்பவர்கள் ஒன்றாகுதலும் அதனை திட்டமிட்டு தடுத்து அதன்மூலம் திமுக வுக்கு மறைமுகமாக முட்டுக் கொடுக்கப் பார்க்கும் இடைச்செருகல் எடப்பாடியை கழித்து விட்டு அண்ணா தி.மு.க பீனிக்ஸ் பறவையாக பிறப்பெடுப்பது மட்டுமே தடைகளை தகர்த்திடும் விடையாகும்.'' இவ்வாறு மருது அழகுராஜ் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
