விஜய் சொன்ன சென்னை விமான நிலைய விரிவாக்கம்.. V வடிவ புதிய டெர்மினல் சாத்தியமே.. அதிகாரிகள் பதில்
சென்னை: இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகள் கையாளும் திறன் கொண்ட ஐந்தாவது முனையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம் கடந்த 2007ம் ஆண்டு முதலே பேசப்பட்டு வந்துள்ளது. தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் கைவிட்ட நிலையில், மீண்டும் பேசுபொருளாகவும், விவாதமாகவும் மாறி உள்ளது.சென்னை விமான நிலையத்தை முதல்வர் விஜய் கூறியபடி, வடமேற்கே விரிவாக்கம் செய்து ஐந்தாவது டெர்மினல் அமைத்தால், விமான நிலையத்தின் மொத்த கையாளும் திறன் ஆண்டுக்கு 55 மில்லியன் பயணிகளாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் நேற்று சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் (ஏ.ஏ.ஐ.) இயக்கப்படுகிறது. தற்போது, இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டது. வளர்ந்துவரும் சென்னை மாநகரத்தின் தேவை, பயணிகளின் வசதி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும், சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும், புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.

அதற்கு தேர்வு செய்யப்படும் இடம், பெரிய அளவில் விவசாயிகளை பாதிக்காத வகையிலும், அதிக அளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும். ஆனால், முந்தைய அரசு, விவசாயிகளை பெரிய அளவில் பாதிக்கும் வகையிலும், குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும், விமான நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களை அறிந்து, நாள் 20.1.2025 அன்று அப்பகுதிக்குச் சென்று, அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து சில அறிவிப்புகளை வெளியிட்டேன்.
அதன்படி, "சென்னை பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களை உள்ளடக்கி அமையவிருக்கும் விமான நிலையத்தை எதிர்த்துப் போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களுக்கும் மேலாக இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.
விக்ரவாண்டியில் 2024-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்திலேயே, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான விமான நிலையங்களின் பங்கு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கான என்னுடைய முழு ஆதரவும் உண்டு. ஆனால் பரந்தூரில் இந்தத் திட்டம் அமையக்கூடாது. இந்தத் திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தேன்.
மக்கள் மத்தியில் நான் அன்றே அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும், துறை வல்லுநர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கனவே, நான் உறுதி அளித்தவாறு, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த அரசால் கைவிடப்படும்.
அத்துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர்களிடம் கலந்தாலோசித்து, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவ்விடங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு, புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.
இதற்கிடையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய 5-ம் முனையம் (டெர்மினல் 5) என்ற புதிய பயணிகள் முனையம் அமைக்க, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் இணைந்து, அணுகுசாலை மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் 3-ம் பயணிகள் முனையம் (டெர்மினல் 3) என்ற பயணிகள் முனைய கட்டுமானப் பணிகள் முடிவுற்ற பின்பு, ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளைக் கையாளக் கூடியதாக இருக்கும். மேலும், புதிய டெர்மினல்-5 பயணிகள் முனையம் செயலாக்கத்துக்குப் பிறகு, ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடியதாக இவ்விமானநிலையம் இருக்கும். இதன்மூலம், சென்னை விமான நிலையத்தின் சேவைகள் மேம்படுத்தப்படுவதோடு, பயணிகளின் போக்குவரத்துத் தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும்வரை பூர்த்தி செய்யப்படும்" இவ்வாறு முதல்வர் விஜய் கூறினார்.
இதுபற்றி சென்னை விமான நிலைய செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளுக்கு இடையே உள்ள 'V' வடிவ இடைவெளியில் இந்த புதிய முனையம் அமைக்கப்படவுள்ளது. இந்தக் கூடுதல் முனையம், நகர்ப்புறப் பகுதியிலிருந்து விமான நிலையத்தை அணுகும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதுடன், தற்போதுள்ள நிலப்பரப்பிற்குள் கையாளும் திறனையும் அதிகபட்சமாக்கும். நிலப்பரப்பைச் சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம், மிகக் குறைந்த நிலப்பரப்பைக் கொண்ட விமான நிலையங்களில் மிகப்பெரிய ஒன்றாகச் சென்னை விமான நிலையம் திகழும்.
எனினும் இத்திட்டம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது; தொழில்நுட்ப அல்லது போக்குவரத்து ஆய்வுகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை, இதுவரை ஒரு வரைவுத் திட்டம் மட்டுமே முன்வைக்கப்பட்டிருககிறது. ஓடுபாதையைக் கடந்து தற்போதுள்ள முனையத்திற்கும் புதிய முனையத்திற்கும் இடையே பயணிகள் எவ்வாறு பயணிப்பார்கள் என்பது குறித்து இந்திய விமான நிலைய ஆணையம் இன்னும் முடிவெடுக்கவில்லை; இருப்பினும், தானியங்கி பயணிகள் போக்குவரத்து அமைப்புகளை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களை விவரித்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர், 10 விரைவு-வெளியேற்ற டாக்ஸிவேக்கள் மற்றும் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள சாலையை அகலப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும் என்று கூறினார். விமான நிலையத்தின் பின்புறத்தில் அமைக்கப்படவுள்ள சரக்குக் கையாளும் மையம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. அதன் ஆண்டு கையாளும் திறன் (டன்களில்) இன்னும் திட்டமிடப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஜிஎஸ்டி சாலையில் தற்போதுள்ள சரக்கு முனையம், பயணிகள் விமானங்களின் அடிப்பகுதியில் கொண்டு வரப்படும் சரக்குகளுக்கான கிடங்காகத் தொடர்ந்து செயல்படும்.
சென்னை புறவழிச்சாலை அல்லது வெளிவட்டச் சாலையிலிருந்து (அவுட்டர் ரிங் ரோடு) 5.2 கி.மீ நீளத்திற்கு சரக்கு போக்குவரத்துக் காரிடார் அமைக்க கும்டா முன்மொழிந்த திட்டத்தை விமான நிலையம் ஆணையம் ஆதரிக்கிறது. இத்திட்டம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள நெரிசலைக் குறைப்பதுடன், சாலைக்கு அப்பால் நிலம் கையகப்படுத்தாமலேயே விமான நிலையத்தை அணுகுவதற்கான கூடுதல் வழியையும் வழங்கும் . மேலும், இந்தக் புதிய காரிடாருக்கு ஏற்றவாறு AAI ஏற்கனவே ஒரு முதன்மைத் திட்டத்தை (மாஸ்டர் பிளான்) உருவாக்கி 2024-ல் தமிழகத் தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளது.அதன்பின்னர் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளுக்கு வழிகாட்டி வருகிறது.
விமான நிலையத்தை தேசிய நெடுஞ்சாலை 32-உடன் இணைப்பதில் முக்கியப் பங்காற்றக்கூடிய உயர்மட்டச் சாலை ஒன்றை அமைப்பதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான அணுகுசாலை அமைக்கப்பட்டவுடன், இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும். அடையாறு ஆற்றின் நீரோட்டம் குறித்து 'நீர் வளங்களுக்கான மையம்' விரிவான அறிக்கை ஒன்றை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது; அதில் ஆற்றின் நீரோட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட உயர்மட்டச் சாலை அமைப்பு, அதன் தூண்கள் ஆகியவை குறித்துத் தெளிவாக ஆய்வு செய்யப்பட்டு, ஆற்றின் நீரோட்டத்தில் குறிப்பிடத்தக்க நீரியல் தாக்கம் எதுவும் இருக்காது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
