பழைய ஓய்வூதிய திட்டம்..தந்திரமாக பேசும் தங்கம்! நாங்க மிக தந்திரமா செய்வோம்! கொந்தளித்த ஆசிரியர்கள்!
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்ட விவகாரத்தில் உரிய நேரத்தில் உரிய முடிவை அரசு எடுக்கும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இந்த நிலையில் அமைச்சர் தந்திரமாக பேசி உள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் நாங்கள் மிகத் தந்திரமாக செயல்படுவோம் என எச்சரித்துள்ளனர் ஆசிரியர் சங்கத்தினர்.
2003ஆம் ஆண்டுக்கு முன்னதாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்தது. அதற்கு பிறகு பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அப்போது முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு அந்த திட்டத்தின் அடிப்படையிலேயே பலன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் இதுவரை புதிய ஓய்வூதிய திட்டமே அமல்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட நான்கு முறை ஆட்சி மாறிவிட்ட நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவும் அதிமுகவும் வாக்குறுதிகள் அளித்து வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுக இந்த வாக்குறுதியை அளித்தது. ஆனால் ஆட்சி நிறைவடைய போகும் தருணத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு அமல்படுத்தப்படவில்லை.
இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த அறிவிப்பு வரவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனையடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி ஆசிரியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு," அரசு ஊழியர்களின் முதல்வர் ஸ்டாலின் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசு செயலர் ககந்தீப் சிங் பேடி தலைமையில் அரசு குழு அமைத்திருக்கிறது. பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் ஆசிரியர்களுடன் குழு கருத்துக்களை பெற்றுள்ளது. அதை பரிசீலித்ததில் உரிய நேரத்தில் உரிய முடிவை அரசு எடுக்கும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தந்திரமாக பதில் அளித்துள்ளார். அவருக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, 2026 சட்டப்பேரவை தேர்தலில் எங்களது செயல்பாடுகள் மிகத் தந்திரமாக இருக்கும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூறியுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள அதன் மதுரை மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன்," 2021 தேர்தலில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்து இதுவரை நிறைவேற்றவில்லை.
நேற்று சட்டப்பேரவையில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு நிலைப்பாடு குறித்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி தந்திரமான கேள்வி என குறிப்பிட்டு மிகத் தந்திரமாக பதில் அளிக்க உள்ளேன். பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான கோரிக்கைக்கு உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இதற்காக ககந்தீன் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறியிருக்கிறார். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியாகும். 2026 தேர்தலில் எங்களது செயல்பாடு மிக தந்திரமாக இருக்கும் எனக் கூறிக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications