பழைய ஓய்வூதிய திட்டம்.. விடிய விடிய நடந்த போராட்டம்.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிரடி முடிவு
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் விடிய, விடிய தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதில் தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கடந்த 2003ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்தால் எந்த பெரிய நன்மையும் இல்லை என்று அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே கடந்த ஆண்டு மத்திய அரசு ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது. இதையடுத்து அரசு அண்மையில் பழைய ஓய்வூதியம், புதிய ஓய்வூதியம், ஒருங்கிணைந்த ஓய்வூதியம் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து 9 மாதத்தில் அறிக்கை சமர்பிக்குமாறு குழுவை அறிவித்துள்ளது.ஆனால் இந்த குழுவை அறிவித்த அரசின் முடிவுக்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் கடந்த அதிமுக ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான ஆணையம் 2016-ல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைய அறிக்கை குறித்து தகவல்களை வெளியிடமாறு பல்வேறு போராட்டங்களை அரசு ஊழியர்கள் நடத்தினார்கள். ஆனால் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
முன்னதாக அதிமுக ஆட்சியின் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் கலந்து கொண்ட திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஓராண்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிப்போம் என்று கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் போது வாக்குறுதி அளித்தது.. இந்நிலையில் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகிய நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை தமிழக அரசு தற்போது அமைத்துள்ளது எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. இதில் அரசு ஊழியர் சங்கத்துடன் 64 துறை சங்கங்களும் இணைந்து பங்கேற்றார்கள்.
தமிழகம் முழுவதும் நேற்று காலை 10 மணி வரை நடந்த போராட்டத்தில் பலி ஆயிரம் பேர் பங்கேற்றார்கள். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தார்கள். அங்கு விடிய விடிய போராட்டம் நடத்திய ஊழியர்கள் காலையில் போராட்டத்தை முடித்தனர்.
இதனிடையே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி (அதாவது நாளை மறுநாள்) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாகவும், இதுதவிர, வரும் 25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அரசு ஊழியர்கள் கூறினார்கள்.
மார்ச் 19-ம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும், மேற்கண்ட போராட்டங்களுக்கு பிறகும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications