Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி.. பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது? அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் சொன்ன அப்டேட்
சென்னை: தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை கெடு விதித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தேர்தலின் போது சொன்னது உண்மை எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நல்ல முடிவை விரைவில் எடுப்பார் என வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் நீண்ட காலமாகவே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மிக முக்கியமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
2003 முதல் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, பங்களிப்பு ஓய்வூதியம் எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. அதற்குப் பிறகு 2006, 2011, 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் அதிமுகவும் திமுகவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என மாறி மாறி வாக்குறுதி அளித்தன.

பழைய ஓய்வூதிய திட்டம்
பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அந்தக் கோரிக்கையை நிறைவேற்றாத நிலையில், 2021 தேர்தலில் திமுக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி கொடுத்திருந்தது. நான்காண்டுகள் கடந்துவிட்ட பிறகும் இன்னும் தமிழகத்தில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதை அடுத்து போராட்டத்தில் குதிக்கப் போவதாக அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இல்லையென்றால் கோட்டையை நோக்கி முற்றுகைப் பேரணி நடத்தப்படும் என எச்சரித்திருக்கின்றனர்.
அரசு ஊழியர்கள் கோரிக்கை
2026 சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்துமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்திருக்கிறது. அக்குழு தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறது.
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அந்தக் குழு அறிக்கை தயார் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இடம் சமர்ப்பிக்கும் எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பேசி இருக்கிறார் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சரான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மக்களுக்கு ஆளும் கட்சி மீது எந்த எதிர்ப்பும் இல்லை. மக்களோடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளார்.
முக ஸ்டாலின்
முதலமைச்சரோடு மக்கள் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என திமுக வாக்குறுதி அளித்தது உண்மைதான். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகுதான் போதிய நிதி இல்லை என்பது தெரிய வந்தது. அதிமுக ஆட்சியில் நிதி இல்லாமல் செய்துவிட்டனர். தற்போது அரசு ஊழியர்களுக்கான சம்பளம், திட்டங்கள், கடனுக்காக வட்டி போன்றவற்றைச் செலுத்த வேண்டிய நிலை இருப்பதால் நிதி நிலைமை சரியில்லாமல் இருந்தது. அதன் காரணமாகத்தான் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டுவர முடியவில்லை.
முடிவு எப்போது?
தற்போது இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் இருக்கிறார்கள். இது தொடர்பான நல்ல முடிவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுப்பார், அறிவிப்பார், எடுப்பார்" எனக் கூறியிருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications