ஆம்னி பஸ் கட்டணம் இனி அரசு முடிவு செய்கிறதா? தமிழக முதல்வரிடம் 2 கோரிக்கை.. பயணிகளுக்கு லாபம்?
சென்னை: ஆம்னி பஸ்களில் விழாக்காலம் வந்தாலே கட்டணம் எகிறுவது வழக்கமாகிவிட்டது.. இந்த பிரச்சனைக்கு அபராதம் மட்டும் போதாது.. கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் புதிய பர்மிட் வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வரிடம் முக்கிய கோரிக்கையையும் வைத்துள்ளனர். அது ஏன் என்பதை இங்கே பார்க்கலாம்...!!
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கையில், "தமிழகம் முழுவதும் தினமும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்து சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 3.60 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

அரசு பேருந்துகளைவிட குறைவான கட்டணம்
ஆண்டில் 296 நாட்கள் அரசு பேருந்துகளைவிட குறைவான கட்டணத்தில் சேவை வழங்கி வருகிறோம். மீதமுள்ள நாட்களில் சங்கங்கள் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்துக்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட 50 சர்வீஸ்களில் அதிக கட்டணம் வசூலித்ததாக சங்கத்துக்கும், அரசுக்கும் புகார்கள் வந்தன. இதையடுத்து பயணிகள் நலன் கருதி, சம்பந்தப்பட்ட பேருந்து உரிமையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் திரும்பப் பெறப்பட்டு, அரசுடன் இணைந்து பயணிகளுக்கு வழங்கப்பட்டது.
ஆம்னி பேருந்து தொழில் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.3,900 கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும், தொலைதூரப் பயணங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பயணிகளுக்கு ஆம்னி பேருந்துகள் போக்குவரத்து வசதியை வழங்கி வருகின்றன.
விழாக்காலங்களில் அதிக கட்டணம்
விழாக்காலங்களில் மட்டும் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி அபராதம் விதிப்பதைவிட, இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்காக ஆம்னி பேருந்துகளுக்கு புதிய பர்மிட் வழங்குவதுடன், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும்.
இதன் மூலம் பயணிகளுக்கும், ஆம்னி பேருந்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பயன் ஏற்படும். எனவே, தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தலையிட்டு, ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண நிர்ணயம் மற்றும் புதிய பர்மிட் தொடர்பாக நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
2 கோரிக்கை லாபமா?
ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த கோரிக்கை பெருத்த கவனத்தை பெற்று வருகிறது.. ஆனால், இந்த கோரிக்கை மட்டும் எடுபட்டால், பண்டிகை காலத்தில், டிக்கெட் விலை திடீரென உயர்வது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படலாம்..
முக்கியமாக, ஒரு பயணி டிக்கெட் எடுக்கும்போதே அதிகபட்சம் எவ்வளவு கட்டணம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். பஸ் ஓனர்களுக்கும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட வரம்பு இருக்கும் என்பதால், ஒவ்வொரு பண்டிகைக்கும் கட்டணம் தொடர்பாக பிரச்சனை வருவது குறைய வாய்ப்பு இருக்கிறது.
அதற்காக அரசு கட்டணத்தை நிர்ணயித்துவிட்டால் மட்டும் பிரச்சனை முடிந்துவிடாது. எந்த வகையான பஸ்சுக்கு எவ்வளவு கட்டணம், சாதாரண நாட்களுக்கும் பண்டிகை காலங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கலாம், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக வசூலித்தால் என்ன நடவடிக்கை என்பதையும் அரசு தெளிவாக வகுக்க வேண்டும்.
இதெல்லாம் முறைப்படுத்தி கொண்டுவந்துவிட்டால், ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைக்கும், பயணிகளின் நலனுக்கும் இடையில் ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!


Click it and Unblock the Notifications
