மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு.. வசமாக சிக்கும் மகாவிஷ்ணு.. மேலும் ஒரு வழக்குப்பதிவு
சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகா விஷ்ணு மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி வரை மகா விஷ்ணு நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

மகாவிஷ்ணு பேசுகையில், "மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது. போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் பிறக்கிறார்கள். அது போல் கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம்" என்று பேசினார்.
அப்போது அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் இதனை கடுமையாக எதிர்த்தார். அந்த ஆசிரியர் மகாவிஷ்ணு, அறிவற்றவர் என விமர்சனம் செய்தார். பதிலுக்கு அவரும் உங்கள் பெயர் என்ன? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னால் தான் உங்களுக்கு நான் பதில் சொல்வேன் என மகா விஷ்ணுவும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான் வீடியோ இணையத்தில் பரவியது.
இதில் மகாவிஷ்ணு பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோட்டிவேஷன் ஸ்பீச் என்ற பெயரில் மகாவிஷ்ணு பிற்போக்குத்தனமாக மாணவிகளிடம் ஆன்மிகம் குறித்து சிந்தனைகளை போதித்ததாகவும், மத ரீதியான கருத்துக்களை தெரிவித்ததாகவும் கல்வியாளர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின. சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்தார். இதற்கிடையே மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையே நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அப்படி என்ன கருத்தை நான் சொல்லிவிட்டேன் என நேற்று வீடியோ வெளியிட்டார் மகாவிஷ்ணு.
மேலும் நேற்று சென்னை வருவதாகவும், அப்போது இதற்கு விளக்கம் அளிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து நேற்று சென்னை விமான நிலையம் வந்த மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்து விசாரணை செய்வதற்காக அழைத்து சென்றனர். மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மகாவிஷ்ணு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் 192, 196 (1) ஏ, 352, 353 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் கீழ் அதாவது 92 ஏ பிரிவின் கீழும் மகாவிஷ்ணு மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்படி கலவரத்தை தூண்டுதல், இரு குழுக்கள் இடையே மோதலை தூண்டுதல், குற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையில் இழிவுபடுத்துதல், தவறான தகவலை பரப்புதல், மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வரும் 20 ஆம் தேதி வரை மகா விஷ்ணு நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகா விஷ்ணு மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே மகாவிஷ்ணுவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், இதேபோன்று நான் பல இடங்களில் பேசியுள்ளேன். என் பேச்சு தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டது. மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலேயே நான் பேசினேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications