என்னது மறுபடியுமா! வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் உருவாகும் 3வது தாழ்வுப்பகுதி- தமிழ்நாட்டை தாக்கும்!
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதுவரை வங்கக்கடலில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை தாக்கிவிட்டது.வங்கக்கடலில் இரண்டு வாரங்களுக்கு முன் முதல் தாழ்வு நிலை உருவானது.
இது தாழ்வு பகுதியாக உருவெடுத்து சென்னை அருகே காரைக்கல் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்தது. இதனால் சென்னையில் மிக கனமழை பெய்தது. சென்னையில் இதனால் பல இடங்களில் மிக கனமழை பெய்தது. வடமாவட்டங்கள் நீரில் மூழ்கின.

அந்தமான்
இதையடுத்து ஒரு வாரத்திற்கு முன் அந்தமான் கடலில் ஏற்பட்ட தாழ்வு நிலை காரணமாக குமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து அங்கும் வெள்ளம் ஏற்பட்டது.அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை சென்னைக்கும் புதுச்சேரிக்கு இடையில் கரையை கடந்தது. இதுவும் வடமாவட்டங்களிலும், சென்னையிலும் மிக கனமழையை ஏற்படுத்தியது.

மூன்றாவது காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டை மூன்றாவது காற்றழுத்த தாழ்வு பகுதி தாக்க உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மாற்றம் அடைந்து அது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

எங்கே?
இந்த மேற்கு வடமேற்கு திசையில் நகரும். இதனால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை மற்றும் தென் தமிழகம் ஒட்டி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் தென் பகுதியையொட்டி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இந்த முறை வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இந்த முறை தென் மாவட்டங்கள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளன.

எப்படி?
இதனால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்யும். 25 மற்றும் 26 தேதிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

விளக்கம்
ஒரே மாதத்தில் வங்கக் கடலில் உருவாகும் 3வது காற்றழுத்த தாழ்வு பகுதி இது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெறுமா, தாழ்வு மண்டலமாக மாறுமா என்று இப்போது கணிக்க முடியாது. வங்கக்கடலில் நிலவும் குறைந்த வெப்பநிலையால் பெரும்பாலும் இது புயலாக மாற வாய்ப்பு கிடையாது என்பதால் தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications