"சின்ன பசங்க கிட்ட கூட போதை பொருள் கிடைக்குது.." திருவொற்றியூர் +2 மாணவர் கொலை! மக்கள் சொல்வது என்ன
சென்னை: திருவொற்றியூரில் அரசு பள்ளியில் +2 மாணவர் அடித்து கொல்லப்பட்ட செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. போதை பொருள் தொடர்பாக தட்டி கேட்டதால் அந்த மாணவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதி மக்களிடமே களத்தில் இறங்கி நமது ஒன்இந்தியா கருத்து கேட்டது. இது தொடர்பாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
சென்னை திருவொற்றியூரில் அரசு பள்ளி அருகே +2 மாணவர் தனுஷ் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக்கேட்டதால் தனுஷ் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மக்கள் சொல்வது என்ன
இந்த வழக்கில் கல்லூரி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் என மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் இளம் சிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். இதற்கிடையே திருவொற்றியூர் பகுதியில் இந்த சம்பவம் தொடர்பாக களத்தில் இறங்கிய ஒன்இந்தியா பொதுமக்களிடம் கருத்து கேட்டது. அப்போது பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு, போதியளவில் கண்காணிப்பு இல்லாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
கட்டுப்படுத்த வேண்டும்
பொதுமக்களில் சிலர், சிறுவர்களுக்கு எளிதாக போதைப்பொருட்கள் கிடைப்பதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். குறிப்பாக பள்ளிகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அவர்கள் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
இது தொடர்பாக ஒருவர் கூறுகையில், "இவ்வளவு சிறிய வயதில் இருக்கும் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் எப்படி கிடைக்கிறது என்பதை நாம் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும். பள்ளி தொடங்கும் போதும் முடியும் போது கண்காணிப்பு இருக்க வேண்டும். அப்போது தான் போதை பொருளை கட்டுப்படுத்த முடியும்" என்றார்.
போலீஸ் கண்காணிப்பு
மாணவர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு வன்முறையில் ஈடுபடும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் இதை தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று இன்னும் சிலர் தெரிவித்தனர். அவர்கள் மேலும், "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி நிர்வாகமும் குழந்தைகளை கவனிக்க வேண்டும். காவல்துறையும் பள்ளி நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும்" என்றனர்.
நம்மிடம் பேசிய பொதுமக்கள் சிலர் பள்ளிகளை சுற்றியுள்ள மதுபானக் கடைகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்தும் கவலை தெரிவித்தனர். குறிப்பாக மாணவர்களுக்கே எளிதாக மது பாட்டில்கள் கிடைப்பதாகவும் அதில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். போலீஸ் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு எங்கிருந்து போதை பொருள் வருகிறது.. அதை விற்பது யார் என்பதை கண்டுபிடிக்க முடியும் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.
மீண்டும் நடக்கக்கூடாது
மேலும், போதைப்பொருள் மற்றும் மாணவர்களிடையேயான வன்முறையை தடுக்க சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மக்கள் மேலும் கூறுகையில், "ஒரு உயிர் போய்விட்டது என்பது மிகவும் வேதனையான விஷயம். சுமார் 20 பேர் சேர்ந்து ஒரு மாணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் எந்த பள்ளியிலும் நடக்காமல் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
