வெங்காயம் கிலோ ரூ.100-க்கு எகிறுமா? சென்னை கோயம்பேட்டில் வரத்து சரிவு.. மத்திய அரசு எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து 1,600 டன்னில் இருந்து 600-800 டன்னாக குறைந்ததால் சென்னையில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது... வரத்து சீராகவில்லை என்றால் அடுத்த 10, 15 நாட்களில் வெங்காயம் கிலோ ரூ.100-ஐ எட்டலாம் என தெரிகிறது.. இதைத் தடுக்க மத்திய அரசு 840-850 டன் வெங்காயத்தை சென்னைக்கு அனுப்பியிருக்கிறதாம்...!!

வெங்காயம் இல்லாமல் சமையலே இல்லை என்ற நிலைதான் நம்முடைய தமிழகத்தில் உள்ளது. ஆனால், இப்போது வெங்காயத்தை வாங்கவே இல்லத்தரசிகள் யோசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Onion Price

சென்னை கோயம்பேடு சந்தை நிலவரம்

நேற்றைய நிலவரப்படி பெரிய வெங்காயம் கிலோ ரூ.60 வரையும், சின்ன வெங்காயம் ரூ.70 வரையும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாத இறுதியில் ரூ.30-க்கு விற்பனையான பெரிய வெங்காயம் இப்போது ரூ.60-ஐ தொட்டுள்ளது. அதேபோல் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்ற சின்ன வெங்காயத்தின் விலையும் ரூ.70 ஆக எகிறி உள்ளது..

இந்நிலையில், சென்னையில் வெங்காய விலை இன்னும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக கோயம்பேடு சந்தைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து கணிசமாக குறைந்திருப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாக சொல்கிறார்கள்..

வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் சுமார் 1,600 டன் வெங்காயம் வரத்து இருக்கும் நிலையில், இப்போது 600 முதல் 800 டன் அளவுக்கே வெங்காயம் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரத்து பாதியாக குறைந்ததால், மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது.

வெங்காயம் விலை ஏன் உயர்வு

அப்படி என்ன நடந்தது? ஏன் திடீரென வெங்காயம் வரத்து குறைந்தது? சென்னைக்கு முக்கியமாக மகாராஷ்டிராவின் நாசிக், கர்நாடகாவின் பெல்லாரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெங்காயம் வருகிறது. இந்த பகுதிகளில் ஏற்பட்ட பருவமழை பாதிப்பு மற்றும் கனமழை காரணமாக வெங்காய உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக வெங்காயம் ஏற்றி வரும் லாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் தேவைக்கு ஏற்ப வெங்காயம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வரத்து குறைந்துள்ள நிலையில், பண்டிகை காலம் நெருங்குவதால் தேவை அதிகரித்தால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் இப்போதே அலர்ட் செய்கிறார்கள்.

இதனிடையே, வெங்காய விலை உயர்வு சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் நேற்று முதல் ரக சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயமும் ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது.

ரூ.100 வரை எகிறிடுமோ?

இப்போதுள்ள வரத்து நிலை தொடர்ந்தால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்பதே வியாபாரிகளின் கணிப்பாக உள்ளது.. வரப்போகும் 10 முதல் 15 நாட்களில் வரத்து சீராகவில்லை என்றால், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை செல்லக்கூடும் என்கிறார்கள்.. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வெங்காய விலை உயர்வு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

எனினும், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசும் நடவடிக்கைகளை கையிலெடுத்துள்ளது.. மகாராஷ்டிராவின் மன்மாட் பகுதியில் இருந்து 840 டன் வெங்காயத்தை ஸ்பெஷல் சரக்கு ரெயில் மூலம் சென்னைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்டாக்கிலுள்ள வெங்காயத்தை அதிக விலை நிலவும் பகுதிகளுக்கு அனுப்பி விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

கூட்டுறவு மூலம் வெங்காயம்

அதுமட்டுமல்ல, தமிழகத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கச் செய்ய ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 70,000 கிலோ வெங்காயத்தை நாபெட் (NAFED) எனப்படும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மூலம் பெற்று, தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.30 முதல் ரூ.40-க்குள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, ஒருபக்கம் கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைந்து வெங்காய விலை ஏறிக்கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயத்தை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இருந்தாலும் இனிமேல் வெங்காய விலை குறையுமா அல்லது ரூ.100-ஐ நோக்கி செல்லுமா என்பது, மகாராஷ்டிரா உள்ளிட்ட முக்கிய உற்பத்தி பகுதிகளில் இருந்து கோயம்பேட்டிற்கு வரத்து எப்போது சீராகிறது என்பதில்தான் இருக்கிறது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+