உஷாரய்யா உஷாரு..நீங்க ‘விஐபி’யா? இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்! அசால்ட்டாய் ஆட்டைய போடும் கும்பல்!
சென்னை: ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் கும்பல், உங்கள் ஆவணங்களை வைத்து கடன் பெற வாய்ப்பிருப்பதாகவும், வேலைக்காக பணம் செலுத்தும்படியும் தெரிவிப்போரிடம் கவனமாக இருக்க வேண்டுமென சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஆன்லைனில் வேலை தருவதாக கூறி பலரிடம் இருந்து பணத்தை மோசடிக் கும்பல் கொள்ளையடிக்கின்றனர். இந்த மோசடிகளால் ஒரு பக்கம் பணம் இழப்பு இருந்தாலும், இன்னொரு பக்கம் நமக்கு ஏற்படும் மனக் கஷ்டத்தை அவ்வுளவு எளிதில் வெளியே சொல்ல முடியாது.

யூட்யூபில் லைக் செய்தால் பணம், கூரியர் டெலிவரி செய்தால் பணம், வெளிநாட்டில் இருந்து கிஃப்ட் வந்துள்ளது எனக் கூறி மோசடி என இப்போது புதுவகை மோசடி ஒன்று அரங்கேறியுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார். இதுகுறித்து பேசியுள்ள சைபர் கிரைம் போலீசார்," ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி, உங்களிடம் முன்பணம் செலுத்த யாராவது தொடர்பு கொண்டால், அந்த அழைப்பை துண்டித்து விடவும்.
அடையாளம் தெரியாதவர், உங்களை தொடர்பு கொண்டு வங்கி ஏடிஎம்., கார்டு எண்,ரகசிய எண்,வங்கி கணக்கு எண்,பான் கார்டு போன்ற பண பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை கேட்டால் அந்த அழைப்பையும் துண்டிக்கவும். நிறுவனங்கள் பெயரில் வாட்ஸ்ஆப் மூலம் வர்த்தகர் என அறிமுகமாகி உங்கள் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக உறுதி அளித்தால்,அது போன்றோரிடம் உஷாராக இருக்கவும். உங்கள் மொபைல் போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.,ஐ நம்பி, 'லிங்க்'கை தொடுவதை தவிர்க்கவும்.வங்கி கடன் தருவதாக,கிளை மேலாளர் போன்று தொலைபேசியிலோ,வேறு சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் வங்கி கணக்கு பற்றி விபரம் கேட்டாலோ தெரிவிக்க வேண்டாம்.
பெண்கள், தங்கள் புகைப்படத்தை பேஸ்புக்,இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும். புகைப்படத்தை, 'மார்பிங்' செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக பணம் கேட்டு மிரட்டினால்,சைபர் கிரைம் போலீசில் தகவல் தெரிவிக்கவும். ஏ.டி.எம்., கார்டு மூலம் பெட்ரோல் பங்க், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்யும்போது கவனமுடன் செயல்படவும்.இணையத்தில் பகிரப்பட்டு வரும் கவர்ச்சிகர வேலை வாய்ப்பு செய்தி, வர்த்தக தள்ளுபடி செய்திகளை நம்பி ஏமாறாதீர்.
பழைய கார், பைக் தள்ளுபடி விலையில் உள்ளது என, ஆன்லைன் விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம். உதவி செய்வது போல் நடித்து, உங்களுக்கு தெரியாமல் ரகசிய எண், ஏ.டி.எம்., எண்ணை தெரிந்து, உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்து விடுவார்கள். அறிமுகமற்றவரிடம், இணையத்தில் வீடியோ கால் பேசுவதை தவிர்க்கவும். ஏனெனில் வீடியோ கால் பேசும் போது ஸ்கிரீன் சாட், ஸ்கிரீன் ரெக்கார்டர் எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்ட நேரிடும். உங்கள் குழந்தைகள் பணம் செலுத்தி, ஆன்லைனில் கேம் விளையாடுகிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்கவும்.
கேம் விளையாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பயன்படுத்தப்படாத பழைய வங்கி கணக்குகளை முடக்கி வைக்கவும். மொபைல் தொலைந்துவிட்டால், அதன் எண்ணை, 'பிளாக்' செய்யவும். இல்லையெனில், உங்கள் எண் தவறாக பயன்படுத்தக்கூடும். ஆன்லைன் மோசடி குறித்து, www.cybercrime.gov.in என்ற இணைய தள முகவரியில் புகார் அளிக்கலாம்" என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications