எடப்பாடி கையில்தான் சூப்பர் பவர்.. கண்டுக்க கூட இல்லை பாருங்க.. தோல்வி அடைந்த "ஆபரேஷன் எஸ்"
சென்னை: அதிமுகவில் "ஆபரேஷன் எஸ்" கடந்த சில நாட்களாக தீவிரமாக கவனிக்கப்பட்டது. அந்த ஆபரேஷன் இப்போது கிட்டத்தட்ட தோல்வியை தழுவிவிட்டது. ஆபரேஷன் எஸ் என்றால் ஆபரேஷன் செங்கோட்டையன்.. செங்கோட்டையனின் புரட்சி.. பூதாகரமாக தொடங்கி இப்போது புஸ்வானமாக அமுங்கிவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் செங்கோட்டையன் திடீரென கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். எச்சரிக்கையை தாண்டி.. முக்கியமான சவால் ஒன்றையும் கூட விடுத்திருந்தார்.

செங்கோட்டையன் - எடப்பாடி மோதல்
செங்கோட்டையன் வார்த்தைகளில் குறிப்பிட வேண்டும் என்றால், எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கிறேன். எம்ஜிஆரின் செல்வாக்கு நாடே வியக்கத்தக்க அளவில் இருந்தது. எம்ஜிஆர் வழியில் என்றும் செயல்படுபவன் நான். அதிமுகவிற்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்ஜிஆர். என்னை அழைத்து மனதார பாராட்டி புகழ்ந்தவர் எம்ஜிஆர்.
இப்போது அதிமுக தொடர் தோல்விகளை தழுவி வருகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை, உடனே சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார். அதோடு, கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை தான் நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறாரே என கேட்டபோது 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்களால் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கப்பட்டு இருக்கிறார்.
பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டும்தான் இனி எடப்பாடி பழனிச்சாமி உடன் பரப்புரைகளில் பங்கேற்பேன் என கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அனைவரையும் ஒன்று சேர்த்தால் மட்டும்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும். அதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்து கொள்ள வேண்டும், என்று செங்கோட்டையன் கடுமையாக எச்சரித்து இருந்தார்.
செங்கோட்டையன் புஸ்வானம்
கடந்த 5ம் தேதி செங்கோட்டையன் இந்த காலக்கெடுவை விடுத்து இருந்தார். கிட்டத்தட்ட காலக்கெடு விடுத்து 20 நாட்கள் கடந்துவிட்டது. காலக்கெடு கொடுத்தது என்னவோ 10 நாட்களுக்குத்தான்.. ஆனால் எடப்பாடி பழனிசாமி இதை பொருட்டாக கூட மதிக்கவில்லை.
1. இந்த நாட்களில் செங்கோட்டையனை பற்றி எடப்பாடி எங்குமே பேசவில்லை. இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
2. எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லியும் இதில் பிரஷர் போட்டதாக தெரியவில்லை. அமித் ஷாவை கூட சந்தித்து எடப்பாடி பழனிசாமி நல்ல உறவை பேணுகிறார்.
3. இங்கே ஓ பன்னீர்செல்வம், டி டிவி தினகரனை மீண்டும் கூட்டணியில் சேர்க்கவும் எடப்பாடி பழனிசாமி எதுவும் முயற்சி செய்யவில்லை.
4. செங்கோட்டையனும் கூட.. அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கான பணிகள் எதையும் இதுவரை தொடங்கவில்லை.
5. எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றையும் கடந்து.. வெற்றிகரமாக தனது எழுச்சி பயணத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார். கொங்கு மண்டலத்திலேயே எந்த எதிர்ப்பும் இன்றி பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
6. செங்கோட்டையன் பேசிய நாளில் தீவிரமாக அறிக்கைகளை விட்டு ஓ பன்னீர்செல்வம், சசிகலா கூட அமைதியாகிவிட்டனர்.
இதன் மூலம் அதிமுகவிற்குள் சூப்பர் பவர் தனக்குத்தான் இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி மீண்டும் நிரூபித்து உள்ளார். மீண்டும் கட்சிக்குள் "பழைய" ஆட்களை கொண்டு வர வாய்ப்பே இல்லை என்பதை நிரூபித்து உள்ளார். அதோடு எனக்கு எதிராக புரட்சி செய்தால் அவர்களை ஓரம்கட்டிவிடுவேன் என்பதையும் செங்கோட்டையன் விவகாரம் மூலம் எடப்பாடி நிரூபித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications