Opinion Poll: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. விஜய்க்கு எத்தனை தொகுதிகள்? வெளியான புதிய கருத்து கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடக்கிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவும் நிலையில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில், இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் (ஐபிடிஎஸ்) அமைப்பு நேற்று சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பை வெளியிட்டது. இதில் திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. வரும் வியாழக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில நாட்கள் இருப்பதால் அரசியல் கட்சிகள் அனல் பறக்க பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது.

திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் விஜய்யும் நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடுகிறார்கள். விஜய்யின் வருகையால் இந்த தேர்தலில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும், அவர் பிரிக்க போகும் ஓட்டுகள் யாருடையது என்பது குறித்து அரசியல் விமர்சகர்களால் பெரும் விவாதமே நடத்தப்பட்டு வருகிறது.
ஆளும் கட்சியாக உள்ள திமுக தனது சாதனைகளை பட்டியலிட்டு ஆட்சியை தக்கவைக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் அதிமுக இழந்த ஆட்சியை மீட்க வியூகம் வகுத்து வருகிறது. விஜய்யும் தவெக ஆட்சியை பிடிக்கும் என்று பேசி வருகிறார். கடுமையான போட்டி நிலவுவதால், இந்த முறை ஆட்சியை பிடிக்க போவது யார்? என்ற எதிர்பார்ப்பு இந்திய அளவில் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன. இந்தநிலையில், இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் (ஐபிடிஎஸ்) அமைப்பு நேற்று சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளாதவது:-
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நாங்கள் கருத்து கணிப்பு நடத்தினோம். 4 வது கட்ட ஆய்வில் 35,126 பேரிடம் நேரில் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இதில், தற்போதைய நிலவரப்படி திமுக தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறியுள்ளது. 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 138 இடங்களை கைப்பற்றும். திமுக வாக்கு சதவிகிதம் 39.80 ஆக இருக்கும்.
அதிமுக கூட்டணி 70 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி 33 சதவிகித வாக்குகளை பெறும். விஜய்யின் தவெக இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தக் கட்சி 3-வது இடத்தை பிடிக்கும். எனினும், தவெக எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்பதை கணிக்க முடியவில்லை. சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 8.42 சதவீத ஆதரவு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளை வைத்து பார்க்கும் போது, தமிழக அரசியலில் முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் காணும் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' (TVK), முதல் ஆட்டத்திலேயே கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் எனத் தெரிகிறது. ஆனால், அவரால் வெற்றியை பெற முடியாது.. வெறுமனே வாக்குகளை பிரிப்பார் என்பதே கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவருகிறது.












Click it and Unblock the Notifications