கைகளை பின்னால் கட்டி.. திருமலா பால் நிறுவன மேலாளர் மரணத்தில் சந்தேகம் எழுப்பிய எடப்பாடி, அண்ணாமலை
சென்னை: சென்னையில் திருமலா பால் நிறுவனத்தில் மேனேஜராகப் பணிபுரிந்த நவீன் பொல்லினேனி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். நவீன் இறப்பில் போலீசார் மீது சந்தேகம் வருவதாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நவீன் பொல்லினேனி, 37. இவர், சென்னை மாதவரத்தில் தங்கி, திருமலா பால் நிறுவனத்தில், நிதிப்பிரிவு கருவூல மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிறுவனத்தில், 44.50 கோடி ரூபாய் கையாடல் செய்துவிட்டதாக, நவீன் பொல்லினேனியிடம், திருமலா பால் நிறுவனத்தினர் விசாரித்து உள்ளனர். பணம் கையாடல் குறித்து, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜனிடமும் புகார் அளித்துள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் புழல் பிரிட்டானியா நகரில், நவீன் பொல்லினேனி வீடு கட்டி வரும் இடத்தில் உள்ள குடிசையில், துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
கைகள் பின்பக்கம் கட்டியபடி
ஆனால், அவரது கைகள் பின் பக்கம் கட்டப்பட்டு இருந்தன. உயரத்தை தாவி பிடிக்க அங்கு வாய்ப்பு இல்லை. டேபிள் உள்ளிட்ட பொருட்களும் இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி துாக்கிட்டு கொண்டார் என, சந்தேகம் எழுகிறது. இதனால், புழல் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவ இடம் அருகே உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அங்கு நவீன் பொல்லினேனி மட்டும், காரில் இருந்து இறங்குவது பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நவீன் தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது வேறு யாரேனும் அவரைக் கொலை செய்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
எடப்பாடி கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை 'திருமலா' பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொல்லினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதியாமல் அவர் விசாரிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்ததாகவும் செய்திகள் வருகின்றன.
நவீன் தூக்கில் இருந்த குடிசையில் எந்த சேரும் இல்லை; அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தன என்று செய்திகள் வருகின்றன. கைகள் கட்டப்பட்ட ஒருவர், சேர் இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்? இந்த வழக்கின் அடிப்படையான கேள்வி - காவல் துறை வழக்கு பதியாமல், எதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது? அதுவும், கொளத்தூர் துணை ஆணையரே நேரடியாக விசாரித்ததாக சொல்லப்படுகிறது. இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
என்ன பதில் வைத்துள்ளார் ஸ்டாலின்?
காவல் துறை விசாரணைகள் சந்தேகத்துக்கு உரியதாக மாறி வருவதற்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். நிதி மேலாண்மை பற்றி நான் கேட்ட ஒரு கேள்வியை, கண், காது, மூக்கு வைத்து திசைத் திருப்பி சித்தரிப்பதில் இருந்த முனைப்பு, ஸ்டாலினுக்கோ, அவரின் திமுக அரசுக்கோ, ஒரு முறையாவது சட்டம் - ஒழுங்கைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு இருந்ததா? காவல் துறை நிர்வாகம் செய்யத் தெரியாத முதல்வர், தன் தொகுதி உள்ளடக்கிய காவல் மாவட்டத்தில் நடந்துள்ள இச்சம்பவத்துக்கு என்ன விளக்கம் தரப் போகிறார்?
நவீன் மர்ம மரணம் குறித்து எந்தவித குறுக்கீடும் இல்லாமல் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குறிப்பாக காவல் துறை வழக்கு பதியாமல் விசாரணை நடத்தியது குறித்து தீர விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை சந்தேகம்
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உடல் கண்டெடுக்கப்பட்ட திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளர் நவீன் குறித்து, தமிழகக் காவல்துறை ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
நவீன் உடல், கைகள் பின்பக்கம் கட்டப்பட்ட நிலையில், நைலான் கயிற்றில் தொங்கவிடப்பட்டு இருந்திருக்கிறது. உடல் கிடைத்த அறையில், எந்த நாற்காலிகளும் இல்லை. முழுக்க முழுக்க சந்தேகமான முறையில் கிடைத்த உடலை வைத்து, தற்கொலை என்ற உறுதியான முடிவுக்கு எப்படி வந்தது திமுக அரசின் காவல்துறை?
பணம் கையாடல் செய்ததாகக் கூறப்படும் புகார் வந்து இரண்டு வாரங்கள் கடந்தும், காவல்துறை விசாரணை செய்யவில்லை என்றும், திரு. நவீன் அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சலில், காவல்துறை குறித்து எந்தக் குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை என்று காவல்துறை செய்திக் குறிப்பு பெருமையுடன் தெரிவிக்கிறது. இரண்டு வாரங்களாக விசாரணை நடத்தவில்லை என்பதில் காவல்துறைக்கு அசிங்கமில்லையா?
ஏன் அவசர விடுப்பில் சென்றார்?
சுமார் ₹40 கோடிக்கும் அதிகமான பணம் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகாரில், இரண்டு வாரங்களாகக் காவல்துறை எந்த விசாரணையும் செய்யாமல் இருந்திருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. நவீன் அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சல் நவீன் அவர்களது கைபேசியிலிருந்து அனுப்பப்பட்டதா அல்லது அவரது கணினியிலிருந்து அனுப்பப்பட்டதா? அந்த மின்னஞ்சலில், திருமலா பால் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் நவீனை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை முன்பே விசாரித்திருந்தால், இதனை நவீன் நேரடியாகக் காவல்துறையிடம் தெரிவித்திருக்க மாட்டாரா?
நவீனை, தனியாக விசாரணை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாண்டியராஜன், அவசர அவசரமாக விடுப்பில் சென்றது ஏன் என்ற கேள்விக்கு, இன்னும் பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கில், துணை ஆணையாளர் பாண்டியராஜன் தொடர்பு குறித்து, சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளிலா, இரண்டு நாளிலா அல்லது ஒரு வாரத்திலா? எத்தனை நாட்களில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என்பது குறித்து ஏன் எந்தத் தகவலும் இல்லை?
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர நிகழ்வுக்கும், தற்போது, நவீன் இறப்புக்கும் பொதுவான சந்தேகம், திமுக அரசின் காவல்துறை மீதுதான். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications