7 கட்டமாக லோக்சபா தேர்தல்? “பாஜகவுக்கு உதவும் தேர்தல் ஆணையம்..” எதிர்க்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு
சென்னை: விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இன்று தேர்தல் ஆணையர்கள் நடத்திய ஆலோசனையில், எந்தெந்த மாநிலத்தில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, மத்தியப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் 2 அல்லது 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்றும், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மாநிலங்களில் 6-7 கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் ஒரேகட்டமாக தேர்தல் என்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இந்த முறையும் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் கூர்மையடைந்துள்ளன.
ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படாமல், 7 கட்டங்களாக நடத்துவதன் மூலம் பிரதமர் மோடி மற்றும் ஆளும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல தேர்தல் ஆணையம் வழிவகுத்து கொடுக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
அதேபோல தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது எனில், தேர்தல் நாளுக்கு ஒரு நாளைக்கு முன்னர் அனைத்து வகையான பிரசாரங்களும் நிறுத்தப்படும். ஆனால், பல கட்டங்களாக பிரித்து தேர்தல் நடத்தப்படும் மாநிலங்களில் பிரதமர் மோடி பரப்புரையை மேற்கொண்டிருப்பார். இது டிவி, சோஷியல் மீடியா, நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள் வழியாக தமிழ்நாட்டு மக்களை எட்டும். இதை எப்படி ஏற்றுக்கொள்வது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக போலீஸ் துணை ராணுவத்தினர் பயன்படுத்தப்படுவதால், ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்போது ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்து வருகிறது. இந்த விளக்கத்தின் மீதும் சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அதாவது, "பாதுகாப்பு துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பதாக நாங்கள் சொல்லும்போது, அப்படியெல்லாம் ஒன்னுமில்லை என்று சொன்ன மத்திய அரசு இன்று, துணை ராணுவம், போலீஸ் பற்றாக்குறை குறித்து வெளிப்படையாக பேசுகிறது. ஆள் பற்றாக்குறை இருக்கிறது எனில், தேவையானவர்களை எடுத்து அவர்களை கொண்டு ஒரே கட்டமாவோ, அல்லது இரண்டு கட்டமாகவோ தேர்தலை நடத்த வேண்டியதுதானே?" என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
மேலும், "பல கட்டங்களாக தேர்தல்களை நடத்தும் நடைமுறை என்பது தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறும் செயலாகும். மட்டுமல்லாது முழுக்க முழுக்க ஆளும் கட்சிக்கு ஆதரவான செயல்பாடு" என்று விமர்சித்துள்ளன.












Click it and Unblock the Notifications