"ஹனிமூன்" பீரியட் ஓவர்! தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? இன்றுடன் 6 மாதம் முடியுதே!
சென்னை: தமிழக சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்து சட்டசபை விதிகளின்படி இன்றுடன் 6 மாதங்கள் முடிவடைந்துள்ளன. இதன் பிறகு தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாம் என்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக விஜய்யும் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இதைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க தவெக அரசுக்கு ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டிருந்ததை அடுத்து கடந்த மே 13 ஆம் தேதி முதல்வர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியிருந்தார்.

அதிருப்தி
அப்போது மேற்கண்ட கூட்டணி கட்சிகளுடன் 10-க்கும் மேற்பட்ட அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களும் விஜய் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்களும் எதிராக 22 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். 5 எம்எல்ஏக்கள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தனர். இதனால் பெரும்பான்மைக்க 118 மேஜிக் நம்பர் தேவைப்படும் நிலையில் தவெக அரசுக்கு 144 எம்எல்ஏக்களின் ஆதரவு அந்த வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றார்.
6 மாதங்களுக்கு No நம்பிக்கையில்லா தீர்மானம்
ஏற்கெனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் அடுத்த 6 மாதங்களுக்கு அந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது என்பது சட்டம்! எனவே 6 மாத காலம் தவெக அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் உற்று நோக்கின.
சட்டம் ஒழுங்கு
இதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு , துப்பாக்கி கலாச்சாரம், மெத் புழக்கம் போன்ற பிரச்சினைகள் ஆட்சிக்கு சவாலாக இருந்து வருகின்றன.
கொலைகள் உயர்வு
தமிழகத்தில் தீபாவளி நாளில் மட்டும் 13 கொலைகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும் அமைச்சர்களின் செயல்பாடுகளும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
விஜய்யும் அதையே செய்கிறாரா?
கடந்த காலங்களில் திமுக ஆட்சியை விஜய் விமர்சித்திருந்தார். ஆனால் ஒரு பிரச்சினை என வரும் போது அப்போதைய ஆட்சிகள் என்ன முடிவு எடுத்ததோ அதே முடிவுகளைத்தான் விஜய்யும் எடுக்கிறார். உதாரணமாக மீனவர்கள் பிரச்சினையில் நல்ல தீர்வு காணாமல் எப்போது பார்த்தாலும் பிரதமருக்கு முதல்வர் (அப்போதைய நிலவரம்)ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார், மானே தேனே பொன்மானே... என தவெக தலைவராக இருந்த விஜய் விமர்சித்திருந்தார்.
கடிதம் எழுதும் விஜய்
ஆனால் இன்று தவெக ஆட்சியிலும் விஜய், பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். பாஜக அரசை தைரியமாக எதிர்க்க துணியவில்லை என்றெல்லாம் விஜய் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அமைச்சராக இருக்கும் சரத்குமார், முன்பு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போதை பொருள் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
ஆபாச குறுஞ்செய்தி
அது போல் தவெக எம்எல்ஏவும் துணை சபாநாயகருமான ரவிசங்கர், புகார் கொடுக்க வந்த சமூக ஆர்வலரை கடுமையாக தாக்கியதாக வீடியோ வெளியானது. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.
பட்டு வேட்டி பரிசு
இதனால் ரவிசங்கர், அருள் விக்னேஷுக்கு எதிராக விஜய் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர்கள் இருவருக்கும் பட்டு வேட்டி கொடுத்து தீபாவளி பரிசளித்ததால் எதிர்க்கட்சிகள் கடும் கோபத்துக்குள்ளாகியுள்ளன.
"செய்த தவறுக்கு நடவடிக்கை எடுக்காமல் கூப்பிட்டு வச்சி தீபாவளி பரிசு கொடுப்பதா" என முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
6 மாதம் ஓவர்
இந்த நிலையில் சட்டசபை விதிகளின்படி தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்து இன்றுடன் 6 மாதங்கள் முடிகின்றன. எனவே இதன் பிறகு எந்த நேரத்திலும் எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரலாம் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 13 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ராஜினாமா கடிதம்
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தவெக எம்எல்ஏக்களுடன் மாமல்லபுரத்தில் ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், அவர்களிடம் ராஜினாமா கடிதங்களை வாங்கியதாக சொல்லப்படுகிறது.
ஒரு வேளை எதிர்க்கட்சிகளின் குதிரை பேரத்திற்கு எம்எல்ஏக்கள் ஆட்கொள்ளப்பட்டால் அவர்களின் ராஜினாமா கடிதத்தின் மீது நடவடிக்கை எடுத்து இடைத்தேர்தலை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
70 கோடி வரை பேரம்
தவெக அரசை கவிழ்க்க அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் செயல்பட்டு கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக தவெக எம்எல்ஏக்கள் சிலரிடம் ரூ 70 கோடி வரை பேரம் பேசுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேச்சுவார்த்தைகளும் ஜரூராக நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கூவத்தூர் கூத்து
இதனால் கூவத்தூர் கூத்து போல் அடுத்த 3 நாட்களுக்கு தவெக எம்எல்ஏக்கள் மாமல்லபுரம் விடுதியில் தங்க வைக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இதை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மறுத்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பீர்களா என எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அது வரும்போது பார்க்கலாம், எல்லாவற்றையும் பொதுவெளியில் பேச முடியாது என்றார். அது போல் "நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார்" என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
