எடப்பாடிக்கு தான் ஏழரை! தவெகவுடன் ஒன்றிணையும் ஓபிஎஸ்! டோனை மாற்றீய டிடிவி! திமுக லட்டு மாதிரி சான்ஸ்
சென்னை: "யாரும் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் என பேசுகிறார்கள்.. கொஞ்ச நாள் சஸ்பென்சிலேயே சஞ்சாரம் செய்யுங்கள்.. ஜனவரிக்கு பிறகு தவெக பற்றி தெரியும்" என பேசி இருந்தார் விஜய். அதை உண்மையாக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழக கூட்டணி குறித்த பேச்சுகள் தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தவெக பக்கம் சாயலாம் என்ற கருத்து எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அமைந்துள்ளது.
ஒருவேளை இந்த கூட்டணி அமைந்தால் அது திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்கின்ற அரசியல் பார்வையாளர்கள். ஆட்சிக்கு எதிரான மனநிலை வாக்குகளை விஜய் பிரிப்பதோடு, அதிமுக பாஜக ஆதரவு வாக்குகளை டிடிவி தினகரன், ஓபிஎஸ் மூலம் விஜய் பிரிப்பர் எனவும், இதுவும் திமுக தரப்புக்கு சாதகமாக இருக்கும் என்கின்றனர்.
தழகத்தில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் (தவெக) எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதமாகி உள்ளது. குறிப்பாக, இந்த கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் அளித்த பதில், தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல்
டிடிவி தினகரனிடம் தவெக கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, "புதிய கட்சி ஒன்று எங்களுடன் கூட்டணி அமைக்க பேசி வருகிறது. பொங்கலுக்குள் முடிவு தெரியும்" என்று கூறியிருந்தார். இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி அமைந்ததால், டிடிவி தினகரனின் கட்சி தனி கூட்டணி போட்டியிட்டது. பிறகு 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுகவும், ஓபிஎஸ் தரப்பும் சேர்ந்தனர். ஆனால் தற்போது மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளது.
தவெக கூட்டணி
இந்தநிலையில், பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோருக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டது. இதனால் டிடிவி, ஓபிஎஸ் ஆகியோர் அடுத்தடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த சூழலில், தன் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வைத்திருக்க வேண்டிய நிலை ஓபிஎஸ்க்கு உள்ளது. அதனால் தான் அவர் சமீபத்தில் தனது அணியினருடன் ஆலோசனை நடத்தி, "திமுக கூட்டணியா? தவெக கூட்டணியா?" என்ற கேள்வியை முன்வைத்து கருத்து கேட்டுள்ளார். அதில் பெரும்பாலோர் தவெக கூட்டணியை ஆதரித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
ஓபிஎஸ் ஆதரவு
ஓபிஎஸும், "அரசியலில் எதுவும் நடக்கலாம்" என்று கூறி, தவெக கூட்டணிக்கு ஆதரவான சிக்னலை காட்டியுள்ளார். அதேபோல், தினகரனும், விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று முன்பே கூறியிருந்தார். இப்போது மீண்டும் அவர் ஜனவரியில் கூட்டணி விவரம் தெரிவிப்போம் என்று அறிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இரண்டு தலைவர்களும் ஒன்றாக தவெக பக்கம் நகர்ந்தால், அது பாஜகவுக்கும் அதிமுகக்கும் சவாலாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இன்னும் தங்கள் ஆதரவாளர்கள் வட்டத்தை வலிமையாக வைத்திருப்பதாக கருதப்படுகிறது.
அதிமுக அதிர்ச்சி
விஜய் தரப்பில் இதுவரை நேரடி பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் இல்லை. ஆனால் மறைமுகமாக பேச்சுவர்த்தை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விஜய் தனது சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு ஜனவரி மாதத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுகள் தொடங்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இதனால், வரவிருக்கும் 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் மேலும், சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தவெக தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி எந்தெந்த கட்சிகளுடன் இருக்கும்? அது யாருக்கு பாதிப்புபை ஏற்படுத்தும்? என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மொத்தத்தில், ஓபிஎஸ் மற்றும் தினகரன் இருவரின் சமீபத்திய கருத்துகள், தவெக கூட்டணிக்கு வாய்ப்பு அதிகம் என்ற எண்ணத்தை வலுப்படுத்தி இருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications