ராமர் கோயில்.. மக்கள் கனவை மோடி நிறைவேற்றியுள்ளார்! தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவிக்க ஓபிஎஸ் கோரிக்கை
சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கின. இந்த நிலையில் நாளை (ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்காக அயோத்தியில் நடைபெறும் 'பிரான் பிரதிஷ்டா' எனப்படும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள 6,000 க்கும் அதிகமானோருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

நாளை நடைபெற இருக்கும் ராமர் கோவிலின் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள். மத்திய மாநில அமைச்சர்கள், பல மாநில முதலமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு விடுமுறை அறிவிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், பகவான் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை (22-01-2024 ) அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில், இந்திய மக்களின் தெய்வீகக் கனவை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இந்த மிகப் பிரம்மாண்டமான திருக்கோயில் திறப்பு விழாவினை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அளித்துள்ளன.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழக மக்களிடையே மேலோங்கி உள்ளது. எனவே, தமிழக மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-01-2024 அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications