முட்டுக்கட்டை போட்ட எடப்பாடி.. தவெக உடன் கூட்டணி உறுதியா? ஓபிஎஸ் கொடுத்த ரியாக்ஷன்!
மதுரை: தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார். "தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா?" என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதில் அளிக்காமல் அமைதியாகச் சென்றுள்ளார். ஓபிஎஸ்ஸின் இந்த ரியாக்ஷன் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களைத் தூண்டியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் அமைப்பை நடத்தி வரும் ஓபிஎஸ், அதனை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என அண்மையில் மாற்றினார். முன்னதாக கடந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி அமைந்துள்ள நிலையில் ஓபிஎஸ்ஸை, கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. ஓபிஎஸ்ஸை சேர்க்க வாய்ப்பில்லை என பலமுறை கூறிவிட்டேன் என மீண்டும் உறுதி செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவும் ஓபிஎஸ்ஸை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து பாஜக கூட்டணியில் இல்லை என ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்தனர். அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.
தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ஓபிஎஸ். வரும் 14ஆம் தேதி ஓபிஎஸ் தனது பிறந்தநாளில் கூட்டணி நிலைப்பாடு, தனிக்கட்சி தொடங்குகிறாரா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிக்கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு, தவெகவுடன் கூட்டணி அமைக்கலாமா? என்பது குறித்து ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தங்களுடன் பேசி வருவதாக தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறி இருந்தார். தவெக உடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் விஜய் கட்சியில் சேர்ந்தனர். மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுப்புரத்தினம், பாலகங்காதரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் பலம் குறைந்துகொண்டே வரும் நிலையில், அடுத்து ஓபிஎஸ் என்ன செய்யப்போகிறார், தேர்தல் கூட்டணி யாருடன் என்பது அறிவிக்கப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் தான், செங்கோட்டையனை ஏகத்துக்கும் வாழ்த்தி ஒரு பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் ஓபிஎஸ். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓபிஎஸ் கூட்டணி அமைக்கக்கூடும் என்ற பேச்சு பலமாக எழுந்துள்ளது.
மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே தொடர்வாரா, பாஜக தலைமை அவரை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நிர்ப்பந்தம் கொடுக்குமா என்ற கேள்வியும் நிலவுகிறது. இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
தேர்தல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்துக் கேட்டபோது, "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று ஓபிஎஸ் பதிலளித்தார். "தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா?" என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாகச் சென்றார். ஓபிஎஸ்ஸின் இந்த ரியாக்ஷன் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களைத் தூண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications