ஆஹா.. ஒன்னு கூடிட்டாங்களே! செங்கோட்டையனை சந்தித்த ஓபிஎஸ் டீம்! அடுத்த அதிரடிக்கு தயாராகும் அதிமுக?
சென்னை: எதிர்பார்த்தது போலவே டெல்லி பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக - பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு இடமில்லை என்பதை உறுதி செய்திருக்கிறார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் செங்கோட்டையனை சந்தித்திருக்கின்றனர். விரைவில் செங்கோட்டையன் ஓபிஎஸ் சந்திப்பு நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் மீண்டும் அரசியல் புயல் வீசத் தொடங்கி இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்த நிலையில் வெற்றி கிட்டவில்லை.
இந்த நிலையில் அப்போதைய தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையின் செயல்பாடுகளால் கூட்டணி முடிவுக்கு வந்தது. இதற்கிடையே 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கிறது.

எடப்பாடி அமித்ஷா சந்திப்பு
அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அதிமுக வாக்குகளை அறுவடை செய்யும் விதமாக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வருகிறது. ஆனால் சசிகலா உள்ளிட்டோர் கட்சிக்குள் வந்தால் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதால் எடப்பாடி பழனிசாமி அவர்களை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அமித்ஷா
இது ஒருபுறம் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவில் அதிருப்தி மனநிலையோடு செயல்பட்டு வந்த செங்கோட்டையன் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். இடையில் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவரான அமித்ஷாவை சந்தித்து பேசியது எடப்பாடி பழனிசாமியை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதிமுக கூட்டணி
கட்சியின் சீனியர்களை வெளியேற்றிவிட்டு தனியாக சுமார் 30 நிமிடம் அமித்ஷாவுடன் அவர் பேசியதாக சொல்லப்படுகிறது. அதில் டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு மாற்று ஏற்பாடாக சில ஆலோசனைகளையும் அமித்ஷாவிடம் எடுத்துரைத்தார் எடப்பாடி பழனிசாமி என தகவல் வெளியாகி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க அதிமுக அல்லது அதிமுக கூட்டணியில் தங்களுக்கு இடம் இல்லை என்பதை ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் உணர்ந்திருக்கின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம்
அமித்ஷாவுடன் எடப்பாடி பேசியது என்ன என்பது பற்றிய தகவல்கள் அவர்களது கவனத்திற்கும் சென்ற நிலையில் இனி அடுத்த கட்ட நடவடிக்கையைத் துவக்க வேண்டியதுதான் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர். முதற்கட்டமாக ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான திண்டுக்கல்லைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் பசும்பொன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் செங்கோட்டையனை நேரில் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.
டிடிவி தினகரன்
இந்தச் சந்திப்பின் பின்னணியில் அதிமுக அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் திட்டம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த வாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சந்திப்பு இருக்கும் என்றும், அதற்குப் பிறகு டிடிவி தினகரன் இந்த ஆலோசனையில் கலந்துகொள்ளலாம் எனச் சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு அதிமுகவில் இருக்கும் அதிருப்தியாளர்களை அணிதிரட்டும் முயற்சியும் நடைபெறலாம் என தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் அதிமுகவில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications