மனோஜ் பாண்டியனை தொடர்ந்து வைத்திலிங்கம் திமுகவுக்கு செல்கிறாரா? சட்டென முகம் மாறிய ஒபிஎஸ்!
சென்னை: எந்த காலத்திலும் வைத்திலிங்கம் எந்த இயக்கத்திற்கும் செல்ல மாட்டார் என்பதை உறுதியாக சொல்ல முடியும் என்று முன்னாள் முதல்வர் ஒ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஒபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், அடுத்ததாக வைத்திலிங்கம் திமுகவுக்கு செல்ல உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 4 முனைப் போட்டி உருவாகும் என்று கணிக்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தவெக என்று 4 கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். இன்னொரு புறம் பாஜக கூட்டணியில் இருந்து வெளி வந்துள்ள ஒபிஎஸ் மற்றும் அமமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியம் குறைவாகவே இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஒபிஎஸ் ஆதரவாளர்களில் முக்கியமானவராக இருந்த மனோஜ் பாண்டியன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். இதனால் தென் மாவட்டங்களில் திமுக கூடுதல் வலிமை பெற்றுள்ளது.
இந்த நிலையில் திமுகவின் அடுத்த இலக்கு ஒபிஎஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் தான் என்று கூறப்பட்டு வந்தது. ஏனென்றால் ஒபிஎஸ் அணியில் இருப்பவர்களை எடப்பாடி பழனிசாமி ஏற்க தயாராக இல்லை என்று கூறப்பட்டு வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி திமுக தரப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாகவே வைத்திலிங்கத்திடன் பேசியதாக சொல்லப்பட்டது.
திமுகவிற்கு வந்துவிடுங்கள்.. உங்களுக்கான மரியாதை அளிக்கப்படும் என்று அன்பில் மகேஷ் பேசிய பின், வைத்திலிங்கம் தரப்பும் அமைதி காத்து வருகிறது. ஜெயலலிதா அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக இருந்து, அதிகாரமிக்கவராக வலம் வந்தவர் வைத்திலிங்கம். ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒபிஎஸ் பக்கம் வைத்திலிங்கம் அணி வகுத்தார்.
அதுமட்டுமல்லாமல் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களாக இருந்த ரதிமீனா சேகர், அறிவுரை நம்பி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றுவிட்டனர். தற்போது திமுக தரப்பில் இருந்து அழைப்பு வந்திருப்பதால், முடிவு எடுக்காமல் வைத்திலிங்கம் ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஒபிஎஸ் பேசுகையில், வைத்திலிங்கம் திமுகவுக்கு செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஒபிஎஸ், வைத்திலிங்கம் அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். தற்போது அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு தரப்பில் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. எந்தக் காலத்திலும் எந்த இயக்கத்திற்கும் போக மாட்டார் என்பதை உறுதியாக சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாகவே ஒபிஎஸ் உடனான நெருக்கத்தை வைத்திலிங்கம் குறைத்து வருவதாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications