அறிவாலயத்தின் வாசலை மிதித்த ஓபிஎஸ்.. கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.. வரலாறு அப்படி
சென்னை: ஓ பன்னீர்செல்வம் தனது வாழ்நாளில் அறிவாலயத்தின் வாசலை தான் மிதிக்க போகிறோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.. ஏனெனில் அவரது அரசியல் வரலாறு அப்படியாக இருக்கிறது. அதிமுகவில் மூன்று முறை முதல்வராக இருந்தவர். 3 ஆண்டுகள் துணை முதல்வராக இருந்தவர்.. இன்று இன்று தனது மகன் ரவீந்திரநாத்துடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார். கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லும் வசனம்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்பது அப்படியே ஓ பன்னீர்செல்வத்திற்கு பொருந்தும்.
அண்ணா அறிவாலயம்
ஏனெனில் தமிழக அரசியலில் "நிரந்தரப் பகைவன் யாருமில்லை" என்ற பழமொழிக்கு இன்று அண்ணா அறிவாலயம் இன்று மிக வலுவான சாட்சியாக நின்றது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிழலாகவும், அதிமுகவின் இக்கட்டான காலங்களில் மூன்று முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

கனவிலும் நினைக்காத அறிவாலயப் பிரவேசம்
அதிமுகவின் "கோட்டை" என்று கருதப்பட்ட தேனி மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஓபிஎஸ், அதிமுகுவின் உட்பட்ச பதவியில் இருந்தவர், தனது அரசியல் வாழ்நாளில் ஒருபோதும் திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வாசலை மிதிப்போம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். எடப்பாடி பழனிசாமியுடனான அதிகாரப் போர் மற்றும் அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சூழல், அவரை இன்று அண்ணா அறிவாலயத்தின் படிக்கட்டுகளில் ஏற வைத்துவிட்டது.
அரசியல் வியூகம் என்ன
ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பதால், தேனி மற்றும் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்-க்கு இருக்கும் செல்வாக்கு, இப்போது நேரடியாக திமுகவிற்குப் பலமாக மாறும். இது எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுகவை அந்தப் பகுதிகளில் பலவீனப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுன்ற தொகுதியில் அதிமுக வரலாற்றில் இல்லாத ஒன்றாக டெபாசிட்டை பறிகொடுத்தது.
தவெக-விற்கு ஒரு செக்
நடிகர் விஜய் (தவெக) 30 வயதிற்கு உள்பட்ட இளைஞர்கள் வாக்குகளைக் குறிவைத்து களம் இறங்கும் வேளையில், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளைத் தக்கவைக்க ஓபிஎஸ்-ன் இந்த வரவு திமுகவிற்கு ஒரு பாதுகாப்பு அரணாக அமையும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதிமுக தலைவர்களின் அதிரடி யூடர்ன்
"திமுகவை எதிர்ப்பதே அதிமுகவின் கொள்கை" என்று இருந்த நிலை மாறி, அதன் முக்கியத் தலைவர்களே திமுகவில் இணைவது பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இது வரும் 2026 தேர்தலில் அதிமுகவிற்கு தென்மாவட்டங்களில் சவாலாக மாறும் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதேபோல் ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த தங்க தமிழ்செல்வனும், ஓபிஎஸ்-ம் இப்போது ஒரே கட்சியில், ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்க உள்ளனர்.
இது "தேனி அரசியலில்" புதிய பரிமாணமாக பார்க்கப்படுகிறது. "அம்மாவின் தீவிர விசுவாசி" என்று அறியப்பட்ட ஓபிஎஸ், இன்று திமுகவின் "திராவிட மாடல்" ஆட்சியைப் புகழ்ந்து பேசுவது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, தமிழக அரசியலில் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய வியூக மாற்றமாகவும் பார்க்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications