மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்யும் தியாகிகள்.. அரசு மரியாதை... முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தான திட்டம் கடந்த 2007-2008-ம் ஆண்டில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 13 மருத்துவமனைகளில் மட்டுமே உடல் உறுப்பு தானம் பெறக்கூடிய நிலை இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் பெறக்கூடிய வகையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்தார்.

உடல் உறுப்பு தானம் என்பது வேறு. (Organ donation) உடல் தானம் என்பது வேறு. (Body donation)
மூளை சாவு அடைந்த ஒரு மனிதரின் உறவினர்கள் சம்மதத்துடன் அவர் உடலின் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன. நாம் உயிருடன் இருக்கும்போதே விரும்பினால் நம் உயிருக்கு ஆபத்து எதுவுமின்றி ஒரு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் இவற்றில் ஒரு பகுதியை தானமாகத் தரலாம்.
விபத்துகளின்போது மூளைச் சாவு அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலும். கண்களின் கார்னியா மூலம் இருவருக்கு பார்வை கிடைக்கும். இரண்டு சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்தலாம். நுரையீலையும், கல்லீரலையும், மண்ணீரலையும் தலா இரண்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். தவிர இதயத்தையும் மாற்ற முடியும்.
நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதயத்தின் வால்வுகள், எலும்புகள், லிகமண்ட்ஸ், தோல் இவற்றையும்கூட இன்னொருவருக்கு பயன்படுத்த இயலும். இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.
உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் மறைந்த பிறகும் பலரை வாழ வைக்க முடியும். இந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
— M.K.Stalin (@mkstalin) September 23, 2023
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும்…
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்!












Click it and Unblock the Notifications