ஹாரி பாட்டருக்கே சவால் விடும் நம்ம ஊர் குழந்தைகள்! குட்டீஸ் எழுதிய ’குட்டி ஸ்டோரிஸ்’
சென்னை: இளம் வயதிலேயே குழந்தைகள் கற்பனை திறனுடன் செயல்படுவதற்கான பயிற்சியை அளித்து, பலரை கதை எழுத வைத்துள்ளார் மாஸ்டர் தாமஸ். யார் இவர்? என்ன செய்திருக்கிறார்?
சமூக ஊடகங்கள் வந்த பிறகு இன்றைய குழந்தைகள் முழு நேரமாக யூடியூப்பில் தாலாட்டுக் கேட்டுதான் வளர்கின்றன. பலரது வீட்டில் கைக் குழந்தையிடம் மொபைலை கொடுத்து கார்ட்டூன் கதைகளைக் கேட்க சொல்லிவிட்டுப் பெற்றோர்கள் தங்கள் வேலை பார்க்க தொடங்கி விடுகின்றனர். இதனால், இளம் வயதிலேயே பிள்ளைகள் கற்பனை திறனை மேம்படுத்திக் கொள்ளாமல் யூடியூப் பார்த்துச் சோர்ந்து போய்விடுகின்றனர். அதற்காகத்தான் சமூக வலைத்தளங்களைக் குழந்தைகள் பயன்படுத்தப் பல கட்டுப்பாடுகளை வளர்ந்த நாடுகள் விதிக்க தொடங்கி இருக்கின்றன.

இந்தியாவில் அதைப் பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்குச் சுத்தமாக இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. வண்ணத்துப் பூச்சி போல சிறகடித்துப் பறக்க வேண்டிய பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் இந்தக் கொடுமைக்கு எதிராகக் களம் இறங்கி அதில் கூடுமான வரை வெற்றியும் பெற்றுள்ளார் தாமஸ்.
கொரோனா காலத்தில் உலகமே முடங்கிய போது இவரது மூளை மட்டும் குழந்தைகளின் நலம் மீது அக்கறை கொண்டுள்ளது. அதற்காக 'வண்ணத்துப் பூச்சி'என ஒரு வாட்ஸ் அப் குழுவை தொடங்கி இருக்கிறார் 58 வயதான தாமஸ். அதன் மூலம் பிள்ளைகளை ஒருங்கிணைத்துள்ளார். அந்தக் குழுவில் கத்தார் நாட்டை சேர்ந்த குழந்தைகள் உட்பட 150 பேர் இணைந்துள்ளனர். அவர்களை கிரியேட்டிவ் ஆகச் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் ஊக்கப்படுத்தி இருக்கிறார். ஓவியம் வரைவது, கதைகளை எழுத கற்றுத் தருவது என மனிதர் சில விதைகளைப் பிஞ்சு உள்ளங்களில் தூவி இருக்கிறார்.
இன்று கண்ணகி நகரைச் சேர்ந்த சில குழந்தைகள் கதைகளை எழுதி, புத்தகம் போடும் அளவுக்கு முன்னேறி இருக்கின்றனர். 13 வயது நிரம்பிய திவ்யதர்ஷினி 'டாக்டர் ஆட்டோ' என்ற முதல் கதையை எழுதி பிரசுரம் செய்துள்ளார். இந்தப் பிள்ளை ஒரு டாக்டருக்கு தரும் அதே அளவு மரியாதையை ஒரு ஆட்டோ டிரைவருக்கும் கொடுங்கள் என்ற கருத்தை வலியுறுத்திக் கதை எழுதி இருக்கிறார். இந்தக் கதைக்கு 15 வயது நிரம்பிய இவளது அக்கா நர்மதா ஓவியம் வரைந்துள்ளார். அந்தப் படம் வலி நிறைந்த அந்த ஆட்டோ டிரைவர் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டி உள்ளது.
இந்தப் பிள்ளை எழுதிய கதையைப் புத்தகமாகக் கொண்டுவந்துள்ளார் மாஸ்டர் தாமஸ். இவர் கேரி வித் லவ் அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். குழந்தைகளுக்குப் பொம்மையை வைத்துக் கதை சொல்லும் கதையை கற்றுத் தந்து வருகிறார் இவர். முதன் முதலாக 2022இல் மழலைகளின் கவி மழை என்ற புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்ட இவர், இதுவரை இவர் குழந்தைகள் எழுதிய 11 புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். முன்பு ஒரு புத்தகம் ஆயிரம் பிரதிகளைப் போட்டுள்ளார். அதனால் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. இவரது சேவையை உணர்ந்த அச்சகத்தார் சிலர் உதவி செய்ய முன்வந்தனர் என்கிறார்.

'வண்ணத்துப் பூச்சிகள்' என்பது இவரது பதிப்பகத்தின் பெயர். அது பல வண்ணங்கள் கொண்டதாக இருக்கிறது. இதே பெயரில் பொம்மலாட்டம் கற்பிக்க வேண்டி யூடியூப் சேனல் கூட நடத்துகிறார். இவரது வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 15 வயது எஸ் சஹானா, திருக்குறள் பற்றி பேசி வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். கூடவே சஹானா தனது தந்தையின் உதவியுடன் 1,330 குறள்களைச் செப்புத் தகடுகளில் கல்வெட்டு பாணியில் எழுதிச் செதுக்கி வைத்துள்ளார். இதைச் செய்ய மொத்தம் 11 மணி நேரம் 15 நிமிடம் ஆனது என்கிறார்.
இது எழுதுவதைத் தாண்டி கதை சொல்வதையும் தாமஸ் ஊக்குவிக்கிறார். அது ஒரு தெரபி என்கிறார். அதனால் குழந்தைகளின் மனம் உறுதிப்படும் என சொல்லும் இவர் உளவியல் படிப்பில் எம்.எஸ் முடிந்துள்ளார். எனவே பிள்ளைகளின் மன ஓட்டத்தைத் துல்லியமாகக் கணித்து அவர்களை வழிநடத்துகிறார். இவரது முயற்சிக்கு சில பெற்றோர்கள் பொருளாதார உதவிகளைச் செய்கின்றனர். அதனால் இவரால் சமாளித்துத் தொடர்ந்து நடத்த முடிகிறது. விழுப்புரம், சேலம், திருச்சி, சென்னை என பல ஊர்களிலிருந்து இவரை தொடர்பு கொண்டு பல குழந்தைகள் தங்களின் எழுத்தாற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவர் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு சிறார் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்குப் பொம்மையை வைத்துக் கதை சொல்லும் பயிற்சியை அளிக்க ஆரம்பித்தார். அப்போது பல குழந்தைகள் போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் பற்றி கதை எழுதி உள்ளனர். அதைப் பார்த்துக் கதிகலங்கிப் போனார் இவர். காரணம், அவர்களின் யதார்த்த வாழ்க்கையில் போதைப் பொருள் ஒரு விளைவை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications