சென்னையில் 23 லட்சம் கொடுத்து லீசுக்கு குடிபோன ஜார்ஜ்.. வீட்டின் உரிமையாளர் செய்த மிகப்பெரிய மோசடி
சென்னை: சென்னையில் வாடகை வீட்டில் வசிக்கும் பலர் லீஸ் வீட்டிற்கு சென்று குடியேறலாம் என்று ஆசைப்படுகிறார்கள்.. ஆனால் இதில் பல்வேறு சிக்கல்களும் சவால்களும் உள்ளன. ஏனெனில் லீஸ் வீட்டில் ஏதாவது சிக்கல் வந்தால், உடனே பணம் வாங்கி வெளியேறிவிட முடியாது.. அதேபோல் லீஸ் பணத்தை உரிமையாளர் தராமல் ஏமாற்றினால் அவரிடம் பணத்தை வாங்க அல்லல்படும் நிலையும் ஏற்படும்.. அதேபோல் லீசுக்கு விட்ட வீட்டின் பெயரில் கடன் வாங்கியிருந்தால் பெரிய சிக்கலே வரும்.. அப்படித்தான் அண்ணா நகரில் நடந்துள்ளது.
சென்னை, கோவை போன்ற பல்வேறு பெருநகரில் வீட்டு வாடகை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. குறிப்பாக சென்னையில் வீட்டு வாடகை கடந்த 3 ஆண்டுகளில் 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக சென்னை மாநகருக்குள் உள்ள பகுதிகளில் 1bhk வீடுகள் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலும், 2bhk வீடுகள் 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை போகின்றன. 3bhk வீடுகள் 18000 ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் உள்ளன.

ஆனால் எல்லா இடங்களுக்கும் இது பொருந்தாது. மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், அண்ணா நகர், முகப்பேரு, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, நீலாங்கரை, வடபழனி, வளசரவாக்கம், போரூர், கோடம்பாக்கம், திநகர், சைதாப்பேட்டை, கிண்டி, தரமணி போன்ற சென்னையின் முக்கியமான பகுதிகளில் வாடகை மிகமிக அதிகமாகவே உள்ளது. சில பகுதிகளில் 60000 முதல் 1 லட்சம் வரை கூட இருக்கிறது.. இதன் காரணமாக சாமானிய மக்கள் வாடகைக்கு வீடு போவதைவிட லீஸ் வீட்டிற்கு செல்ல விரும்புகிறார்கள்.. ஏனெனில் லீசுக்கு சென்றால் மாதம் மாதம் வாடகை கட்டத்தேவையில்லை என்பது தான்.
ஆனால் லீஸ் வீட்டிற்கு குடியேறும் போது, நம்பவே முடியாத பல்வேறு சிக்கல்களை மக்கள் சந்திக்க வேண்டியதிருக்கும்.. என்ன சிக்கல் என்றால், வீட்டின் உரிமையாளர் அவராக இருக்க மாட்டார்.. ஓனர் வெளியூரில் இருப்பார்.. அங்கு வாடகைக்கு குடியிருக்கும் நபர் நம்மிடம் மோசடி செய்யவாய்ப்பு உள்ளது. அதேபோல் வீடு பார்த்து தரும் நிறுவனங்கள் ஓனரிடம் ஒப்பந்தம் போட்டு உங்களை லீசுக்கு குடியமர்த்தி இருப்பார்கள்..
ஆனால் அவர்கள் பணம் தராமல் ஏமாற்றினால், வீட்டின் உரிமையாளர் உங்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. அடுத்ததாக வீட்டின் உரிமையாளருக்கு நீங்கள் கொடுத்த லீஸ் பணத்தை, அவர் வேறு எதிலாவது செலவு செய்திருப்பார். வேறு யாராவது குடிவந்தால் தான் தருவேன் என்று கூறுவார். நான்காவது சிக்கல் என்னவென்றால், நீங்கள் மிகப்பெரிய தொகையை லீஸ் பணமாக வீட்டிற்கு கொடுத்து குடி வந்திருப்பீர்கள்.. ஆனால் வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை அடமானம் வைத்தோ அல்லது வீட்டுக்கடன் வாங்கி கட்டாமலோ விட்டிருப்பார். அப்படிப்பட்ட சூழலில் வீடு ஜப்தி செய்யப்படும்.. நீங்கள் பணம் கிடைக்காமல் ஏமாற வாய்ப்பு உள்ளது. கடைசியாக சொன்ன இந்த விஷயம் பல இடங்களில் தற்போது நடக்கிறது.. சென்னை அண்ணா நகரில் நடந்தது பற்றி பார்ப்போம்.
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி 4-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வருபவர் வீரேந்திர ஆனந்த குமார். இவருக்கு 54 வயது ஆகிறது. இவர் கடந்த 2021-ம் ஆண்டு தனது வீட்டை ஜார்ஜ் என்பவருக்கு ரூ.23 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு 2 ஆண்டுக்கு லீசுக்கு விட்டிருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு லீசுக்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் ஜார்ஜ் தான் வசித்து வந்த வீட்டை காலி செய்ய உள்ளதாகவும் பணத்தை திருப்பி தரும்படியும் கேட்டிருக்கிறார். ஆனால் வீட்டின் உரிமையாளர் வீரேந்திர ஆனந்த குமார் பணத்தை தராமல் ஏமாற்றி வந்தாராம். இது குறித்து ஜார்ஜ் அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் வீட்டின் உரிமையாளர் வீரேந்திர ஆனந்தகுமார் ரூ.23 லட்சத்தை ஜார்ஜுக்கு தராமல் ஏமாற்றியதும், லீசுக்கு விட்டிருந்த அதே வீட்டை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று பணத்தை திரும்ப செலுத்தாமல் இருந்ததால் வீட்டை ஜப்தி செய்ய வங்கி முடிவு செய்ய இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து வீட்டின் உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications