30 நாட்களில் பட்டா என்ற தமிழக அரசு உத்தரவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு
சென்னை: தமிழக அரசின் உத்தரவுப்படி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும், விண்ணப்பித்த நாட்களின் அடிப்படையில் வரிசையாக மனுக்களை ஆய்வு செய்ய வேண்டும், இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசின் நில அளவைத் துறை இயக்குனர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்.
நிலம் வாங்குவோர் ஏற்கனவே நிலம் வைத்திருப்பவர்களுக்கு பட்டா என்பது மிக முக்கியமாக இருக்கிறது. நிலத்தை வாங்கும் போது அல்லது உட்பிரிவு செய்த பிறகும் பட்டா வழங்க வேண்டும். விற்பவர் பெயரில் பட்டா இருந்தால் வாங்குபவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கப்படும்.
எனவே நிலம் வாங்குபவர்கள் விற்பவரின் பெயரை பட்டா இருப்பதை நிச்சயமாக உறுதி செய்த பிறகு நிலத்தை பதிவு செய்ய வேண்டும். மேலும் உட்பிரிவு செய்ய வேண்டி இருந்தால் தமிழக அரசின் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தாசில்தார்களிடமும் மனு அளிக்கலாம்.

அவ்வாறு அளிக்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உட்பிரிவு தேவை இல்லை என்றால் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக 80 சதவீத மனுக்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், குறிப்பிட்ட சிலருக்கு உடனடியாக பட்டா வழங்கப்படுவதாக புகார் இருந்தது.
இந்த நிலையில் ஒரு சர்வேயர் பொதுமக்கள் விண்ணப்பித்த தேதி அடிப்படையில் தான் மனுக்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், தங்கள் இஷ்டத்துக்கு ஆய்வு செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நில அளவைத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும். வில்லங்கம், கோர்ட் வழக்கு ஆகியவற்றின் காரணமாக மட்டும் தான் தாமதம் ஏற்படுகிறது.
பட்டா மனுக்கள் மீது வரிசையாக நடவடிக்கை எடுக்கப்படும். எந்த காலதாமதம் கிடையாது. அப்படி காலதாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியிருக்கிறார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"விண்ணப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை நான் வரவேற்கிறேன். பட்டா கோருவது மட்டுமல்ல, பட்டா மாறுதல், பட்டாவில் பெயரைச் சேர்ப்பது நீக்குவது போன்ற விண்ணப்பங்களும் இருக்கின்றன. மாவட்ட வருவாய் அதிகாரி (DRO), கோட்ட வருவாய் அதிகாரி (RDO), வட்டாட்சியர் (Tahsildar), வருவாய் ஆய்வாளர் (Revenue Inspector) என்று அடுக்கடுக்காக அதிகாரிகள் இருக்கும் போது பட்டா தொடர்பான விண்ணப்பங்களும் குறைகளும் ஏன் மலைபோல் தேங்கிக் குவிந்திருக்கின்றன என்பது புரியாத புதிர்.
இந்த நிலை பல ஆண்டுகளாகப் பல அரசுகளில் நிலவி வரும் அவலம். கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்ட பொது அறையில் மக்கள் முன்னிலையில் ஒவ்வொரு விண்ணப்பமாக எடுத்து அதிகாரிகள் முடிவெடுத்தால் இந்தப் பணியை 3-6 மாதங்களில் முடிக்க முடியும் என்று கருதுகிறேன். ஒரு விண்ணப்பதாரர் மீண்டும் மீண்டும் குறை தீர்க்கும் நாட்களில் படையெடுப்பதைப் பல அதிகாரிகளிடம் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் புதிய ஆணை இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications