மிசா பற்றி கொஞ்சமாவது படிங்க தவெக அமைச்சர்களே.. வாயைவிட்ட நிர்மல்குமார்.. சண்முகம் தரமான பதிலடி!
சென்னை: மிசா கால கொடுமைகள் தொடர்பாக தவெக அமைச்சர்கள் கொஞ்சமாவது படிக்க வேண்டும் என்று சிடிஆர் நிர்மல்குமாருக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கையின் போது கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
சட்டசபையில் அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், பெண்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு தான் ஸ்டாலின் அப்போது கைது செய்யப்பட்டார். மிசாவில் கைது செய்யப்பட்டவர் என்று எந்தக் குறிப்பிலும் இல்லை என்று குற்றம்சாட்டினார். அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் பேச்சிற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சட்டசபை மக்கள் பிரச்சனையை விவாதிக்கும் இடமாக இருக்கும். சட்டமன்றம் கத்தல் மன்றமாகவும், சட்டமன்றமாகவும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஆளுங்கட்சி என்பதால் தவெகவுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரு நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்.
சட்டசபையை மக்கள் நலன் சார்ந்து நடத்த வேண்டும். ஊழல் விஷயத்தில் எங்களை போல் எதிர்த்து போராடிய கட்சி நாட்டிலேயே இல்லை. 3 மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருந்துள்ளோம். காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கான மானியக் கோரிக்கையின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு தான் விஜய் பதில் அளிக்க வேண்டும். ஆனால் ஒரு கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் சொன்னாரா? ஒன்றுக்கு கூட முறையாக விஜய் பதில் அளிக்கவில்லை.
இதுவரை இப்படி எப்போதும் நடந்ததே இல்லை. நினைத்ததை எல்லாம் பேசுவோம் என்ற முறையில் சட்டசபையை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. தவெக அமைச்சர்களுக்கு பணிவுடன் சொல்ல விரும்புவது ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், முதலில் கொஞ்சமாவது படியுங்கள்.. இஸ்மாயில் கமிஷன் அறிக்கை ஒன்று உள்ளது. மிசா காலத்தில் சென்னை சிறைச்சாலையில் நடந்த கொடுமைகள் பற்றி விரிவாக அறிக்கை சட்டசபையில் வைக்கப்பட்டது.
மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம், சமூக விரோதிகள் என்று நிர்மல்குமார் சொல்லி இருப்பது எல்லாம், சிறுபிள்ளைத்தனமானது, அறியாமையில் இருந்து வரும் கருத்துகள். இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகள் சிறையில் இருந்துள்ளனர். அதனால் வரலாறு தெரியாமல் திமுக மீது உள்ள கோபத்தில் சகட்டு மேனிக்கு சேற்றை வாரி வீசும் வகையில் அமைச்சர்கள் பேசுவது கண்டனத்திற்குரியது.
மிசா ஆவணங்களை கொஞ்சம் படித்துவிட்டு வாருங்கள். சர்க்காரியா கமிஷன் அன்றைய காலத்தில் எதற்காக போடப்பட்டது என்றெல்லாம் தெரியும். அதற்காக யாரும் முறையாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு யாரும் வழக்கும் போடவில்லை, கைதும் செய்யப்படவில்லை. 3 ஃபைல் டேபிளில் இருப்பதாக விஜய் பேசுகிறார். அதனைப் பற்றி ஏன் பேசவில்லை?
அதனைவிட்டுவிட்டு 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரிய கமிஷன் பற்றி பேசியுள்ளார். ஊழல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. தவெக அரசு உறுதியாக இருக்கிறதா என்பதுதான் கேள்வி என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
