மாணவர்களை பாஜகதான் அடிக்கும்! தமிழக அரசு ஏன் அடிக்குறீங்க? நீங்க கோழையா? பா.ரஞ்சித் பொளேர்
சென்னை: பாஜகதான் மாணவர்களை அடிக்கும் ஒடுக்கும், ஆனால் தமிழக அரசு ஏன் மாணவர்களை அடிக்கிறீர்கள், நீங்கள் என்ன கோழையா என நீட் தேர்வுக்கான எதிராக சென்னையில் நடந்து வரும் போராட்டத்தில் பா.ரஞ்சித், தவெகவை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் , நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்விலிருந்து முழுவதுமாக ரத்து செய்யக் கோரியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், நடிகை ஆன்ட்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பா.ரஞ்சித் பேசுகையில், "தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை காவலர்கள் அடிக்கும் வீடியோக்களை முதல்வர் பார்க்கவில்லையா?
ஏன் காவலர்களை வைத்து அவர்களை ஒடுக்க வேண்டும்? நீங்கள் நீட் எதிர்ப்பாளர்தானே, நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை திட்டம் உங்களுக்கு இருக்கிறது. பாஜகதான் மாணவர்களை அடிக்கும், ஒடுக்கும். ஆனால் நீங்கள் (தவெக) ஏன் அடிக்குறீங்க? பேட்ஜ் இல்லாமல் மாணவர்களை ஏன் அடிக்கிறீர்கள்?
பேட்ஜ் அணியாமல் அடிக்க தமிழக அரசு என்ன கோழையா? போராடும் மாணவர்களை அடிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது. அடிக்கிறதுனு முடிவு பண்ணிட்டா எதற்காக காவல் துறை பேட்ஜ் இல்லாமல் அடிக்கிறாங்க?
மாணவர்கள் போராட்டம் நடத்த நீங்களே ஒரு இடம் கொடுங்கள். அங்கு மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தட்டும். மாணவர்களின் குரல்களுக்கு செவிசாயுங்கள். நீங்கள் கனவு கண்டபடி நீட்டை ஒழிக்கலாம் வாருங்கள் முதல்வரே! எதற்காக மெரினா கடற்கரையை மூட வேண்டும்? மக்களோடு சேர்ந்து நிற்கும் முதல்வராக நீங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என பா.ரஞ்சித் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications
