தமிழ்நாட்டில் மோடிக்கு ஆதரவு அதிகம்! அடித்து சொல்கிறார் பாரிவேந்தர்!
சென்னை: தமிழ்நாட்டில் மோடிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் பல பாஜகவை எதிர்த்து வருகின்றன. சில மாதங்கள் முன்புவரை பாஜகவையும் மோடியையும் ஆதரித்து வந்த பெரிய கட்சியான அதிமுக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்க்கத் தொடங்கி உள்ளது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் பாஜகவை மிகத் தீவிரமாக ஆதரித்து வருகிறார். வருங்காலங்களிலும் பாஜகவுடன் எங்களது கொள்கை ரீதியான கூட்டணி தொடரும் என்றும் கூறி வருகிறார்.
தொடர்ந்து பாஜகவை இவர் ஆதரித்து வருவதால், தேர்தலுக்குப் பின்னர் ஐஜேகேவை பாஜகவுடன் இணைத்துவிடலாம் என ஒரு பேச்சு அடிப்பட்டு வந்தது.
அது குறித்து சில விளக்கங்களைக் கூறியுள்ளார் பாரிவேந்தர். ஐஜேகேவை பாஜகவுடன் இணைக்கும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலளிக்க முன்வந்த அவர், கூடவே எதிர்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுக்கும் சேர்த்து விளக்கமளித்திருக்கிறார்.
குறிப்பாக பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் ரெய்டு நடத்தி, மாற்றுக் கட்சியினரை பாஜக தங்கள் பக்கம் இழுத்து வருகிறது என்றும் திமுக உள்ளிட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். அப்படியான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று சொல்கிறார் பாரிவேந்தர்.
இது பற்றி பாரிவேந்தர் பேசுகையில், "இந்த மாதிரி வெளியாகும் கருத்துகள் எல்லாம் எதிர்க்கட்சிகள் கட்டமைக்கும் கதை வசனங்கள். யாரையும் அடக்கி, மிரட்டி கட்சிக்குள் கொண்டுவந்துவிட முடியாது. கொள்கை பிடித்தவர்களைத்தான் கட்சிக்குள் கொண்டு வர முடியும்.

பாஜகவுக்குச் சென்றால், எதிர்காலம் இருக்கும் என்று நம்பும் ஒருவர்தான் இந்தக் கட்சிக்கு வருகிறார்கள். அதை விட்டுவிட்டு மிரட்டலுக்காக வருகிறார்கள் என்பது பொய்.
அமலாக்கத்துறை என்பது வருமானவரித்துறை என்பது பல காலமாக உள்ளது. ஏதோ பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அமைப்புகள் அல்ல அவை. மேலும் அந்த அமைப்புகள் சுதந்திரமானவை.
திமுக தொடர்ந்து பாஜகவை ஒரு எதிரிபோல தோற்றத்தைக் கட்டமைத்து வந்தது. அதனால் மக்கள் பாஜகவைத் தவிர்த்து வந்தனர்.
இப்போது அந்த நிலை தமிழ்நாட்டில் இல்லை. பாஜகவையும் மோடியையும் ஏற்றுக் கொண்ட மக்கள் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளனர். ஆகவே, பாஜகவுக்கு நல்ல எதிர்காலம் தமிழகத்தில் உள்ளது.
நான் எனக்குப் பதவி கிடைக்கும் என்பதற்காக பாஜகவை ஆதரிக்கவில்லை. எனக்குப் பதவி வேண்டி கட்சி ஆரம்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் ஊழல் அதிகரித்து விட்டது. குடும்ப ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நான் நினைத்தேன்.
ஆகவே கட்சி ஆரம்பித்தேன். ஊழலை மோடி எதிர்க்கிறார். குடும்ப ஆட்சியை பாஜக எதிர்க்கிறது. எனவே அவர்களுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறேன். நிச்சயம் பதவி ஆதாயத்திற்காக நான் பாஜக கூட்டணியில் இல்லை" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு என்பது வலுவாக உள்ளது. அப்படியான சூழலில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவையும் மோடியையும் தைரியமாக ஆதரித்து வருகிறார் பாரிவேந்தர்.
அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் தனக்கு என்று ஒரு தேசிய பார்வை இருப்பதால், பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதேவேளையில் தேசிய பார்வையோடு உள்ள காங்கிரஸ் கட்சியுடன் தங்களால் கூட்டணி வைக்க முடியாது என்று கூறியுள்ளார். அதற்குக் காரணம், அந்தக் கட்சி ஒரு குடும்ப அரசியலை இந்தியாவில் பரப்பியவர்களே அவர்கள்தான் என்றும் விளக்கமளித்துள்ளார் பாரிவேந்தர்.
பாஜகவின் கொள்கையும் ஐஜேகேவின் கொள்கையும் ஒரே திசையில் ஒத்துப் போவதால், வருங்காலத்தில் ஐஜேகேவை பாஜகவுடன் இணைத்து விடுவீர்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "பாஜகவில் கட்சியை இணைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எங்கள் கட்சி வளர்ந்து வருகிறது. எங்களுக்குக் கட்சியை நடத்துவதற்கான சக்தியும் இருக்கிறது. மக்கள் எங்களைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.
ஆகவே, கட்சி வளர்ந்து கொண்டும் இருக்கிறது. பாஜகவுடன் இணைந்து செயல்படுவோம். தோழமையோடு தொடர்ந்து இணைந்திருப்போம். கடந்த முறை பாஜகவினால் எங்களுக்குச் சீட்டுக் கொடுக்க முடியவில்லை. நாங்களும் அதைப் புரிந்துகொண்டோம்.
ஆகவே, தோழமை இன்று தொடர்கிறது. எந்தக் காரணத்திற்காகவும் கட்சியை பாஜகவில் இணைக்க வேண்டிய தேவை எங்களுக்கு உருவாகவில்லை.
பாஜகவுடன் தொடர்ந்து கூட்டணியில் தொடர்வோம். இந்திய அளவில் அவர்களின் கொள்கையை வலுப்படுத்தத் தமிழ்நாட்டிலிருந்து எங்களின் ஆதரவைத் தந்துகொண்டே இருப்போம்" என்று கூறியுள்ளார்.
இவரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மோடி, பெரம்பலூருக்கு வர உள்ளதாக அண்ணாமலை கூறியிருந்தார்.
அந்தக் கேள்விக்குப் பதிலளித்துள்ள பாரிவேந்தர், " பிரதமர் மோடி எனக்காகப் பிரச்சாரம் செய்யப் பெரம்பலூருக்கு வர வாய்ப்பு இருக்கிறது. வரும் 13 ஆம் தேதி வர உள்ளார் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications