வள்ளுவர் காலத்தில் இந்து மதம் இருந்ததா? ஆளுநர் ரவிக்கு தெரியுமா? பழ.கருப்பையா விளாசல்!
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூச தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் என்று பழ.கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். .
தேர்தல் நடைபெறும் வரை அமைதியாக இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, மீண்டு திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசும் வேலையைத் தொடங்கிவிட்டார்.

ராஜ் பவனில் திருவள்ளுவர் விழாவைக் கொண்டாடும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் மறுபடியும் அதே காவி உடையை அணிந்த வள்ளுவர் படத்தை அச்சிட்டு அனுப்பி இருக்கிறார்.
பொதுவாக அரசு விழாக்களில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களுக்கு என்று ஒரு விதிமுறை உள்ளது. எந்த மாதிரியான திருவள்ளுவர் தோற்றத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வேண்டும் என்று அண்ணாதுரை ஆட்சியிலேயே அரசாணை வெளியிடப்பட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
40 ஆண்டுகளுக்கு முன்பே ஓவியர் கே. ஆர். வேணுகோபால் சர்மா வரைந்த வள்ளுவர் படத்தைத்தான் அரசு அங்கீகரித்துள்ளது. அதற்கு நேர்மாறாக அரசு தலைமை பதவியில் உள்ள ஆளுநரே செயல்படுகிறார்.
அவரது செயலை நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. அப்படி இருந்தும் அவர் விடாப்பிடியாகச் சிலர் விமர்சிக்கும்படியான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

வள்ளுவரை ஏன் அவர் டார்கெட் செய்கிறார். திருவள்ளுவருக்குக் காவி உடை உடுத்துவதன் மூலம் எதைச் சாதிக்க நினைக்கிறார். இது குறித்து தமிழகம் அறிந்த பேச்சாளர் பழ. கருப்பையா காட்டமாகப் பேசியிருக்கிறார்.
ஆர்.என்.ரவியின் செயல் குறித்து பழ.கருப்பையா பேசுகையில், "இந்த ஆளுநர் இந்துத்துவாவை புகுத்துவதற்காக முயற்சி செய்கிறார். அதற்கு அவருக்குச் சரியான வழி தெரியவில்லை. தமிழர்கள் தங்களின் மொழியின் மீது காதல் கொண்டவர்கள். இனத்தின் மீது மரியாதை உடையவர்கள்.
இந்த மொழி 3 ஆண்டுகள் பழைமையானது. நம் மொழிக்கு என்று சங்க இலக்கியங்கள் இருக்கின்றன. தொல்காப்பியம் இருக்கின்றது. திருக்குறள் இருக்கின்றது. ஐம்பெரும் காப்பியங்கள் இருக்கின்றன. ஆளுநருக்கு என்னவெல்லாம் இருக்கின்றதோ அவை எல்லாம் தமிழர்களாகிய எங்களுக்கும் இருக்கின்றன.
தனிச்சிந்தனை உடையவர்கள் நீங்கள் என்று காட்டுவதற்கு சாகுந்தலம் நாடகத்திலிருந்து மகாபாரதம் வரை உங்களுக்கு உதவும் என்றால், அதேபோல் நாங்களும் தனிச் சிந்தனை உடையவர்கள் என்று காட்டுவதற்குத் தொல்காப்பியம் முதல் சிலப்பதிகாரம் வரை எங்களுக்கு உதவும்.

இந்தப் பெருமைகள் எல்லாம் நமக்கு இருப்பதை ஆளுநர் ரவியால் தாங்க முடியவில்லை. நான் வேறு, நீ வேறு என்று இரு கோட்பாடுகள் உள்ளவரை நம்மை அவர்களால் இந்துத்துவத்திற்குக் கொண்டுவர முடியாது.
ஆகவே, நமது சமயத்தை ஒழிக்க வேண்டும். நம்மைச் சைவனாக ஆக்க வேண்டும். நான் சைவன், திருமூலர் வழி வந்தவன் எனத் தமிழர்கள் நினைக்க வேண்டும். அதை உணராத வரை தங்களை இந்துக்களாகத்தான் அடையாளப்படுத்த வேண்டிய நிலை வரும்.
ஆகவே, வள்ளுவரை இந்துவாக ஆக்கிவிட்டால் அனைத்தையும் மாற்றிவிடலாம் என்று நினைக்கிறார்கள். திருவள்ளுவர்தானே தமிழின் மூலம். அவரையே இந்துவாக ஆக்கிவிட்டால் அடையாளத்தையே அழித்துவிடலாம் என்று அவர் கருதுகிறார்.
வள்ளுவர் காலத்தில் இந்து மதம் என்று ஒன்று இருந்ததா? அவர் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டிருந்தாரா? அவர் காலத்தில் இந்து மதம் இல்லை. ஆனால் பிராமணர்கள் இருந்தார்கள். பிராமணர்கள் பற்றி திருக்குறளில் வருகிறது. அது ஆளுநர் ரவிக்குத் தெரியாது.

'மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்; பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்' என்று ஒரு குறளை வள்ளுவர் எழுதியிருக்கிறார். வேதத்தை மறந்து போனால் என்ன குடியா மூழ்கிவிடும். மீண்டும் படித்தால் நினைவுக்கு வந்துவிடப்போகிறது. ஆனால், பிறப்பிலே பெற்ற ஒழுக்கத்தை தவறினால் நீ எப்படி பார்ப்பனனாக இருக்க முடியும்? என்று வள்ளுவர் இந்தக் குறள் மூலம் கேட்கிறார்.
வள்ளுவர் தனது திருக்குறளில் பார்ப்பான் என்ற சொல்லை 2 இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று அவர் சொன்னபோதே மேல், கீழ் என்ற நிலையை ஒழித்துவிட்டார். இவை எல்லாம் ஆளுநர் ரவிக்குத் தெரியாது. ஏதோ உளறுகிறார்.
திருவள்ளுவருக்குக் காவியைக் கட்டி, பட்டையைப் பூசிவிட்டால் தமிழ் அடையாளம் மறைக்கப்பட்டுவிடும். இந்துக் கலாச்சாரத்திற்கு வள்ளுவரைக் கொண்டுவந்துவிடலாம். அதற்கான முயற்சியைத்தான் ஆளுநர் ரவி செய்கிறார்.
திருவள்ளுவர் காலத்தில் இந்து மதமோ, சைவ மதமோ, வைணவ மதமோ ஒன்றும் கிடையாது. குறளில் சமண தாக்கமும் பௌத்த தாக்கமும்தான் அதிகம் உள்ளது.
தமிழனை இன ரீதியாகச் சிந்திக்கவைக்கிறார் வள்ளுவர். அதை மாற்றி மதரீதியாகச் சிந்திக்க வைக்கவே காவி உடையை அவருக்கு மாட்டுகிறார்கள். அவரை இந்துவாக்கிவிட்டால், நம்மையும் இந்துவாக்கி விடலாம். நாம் இந்துவாக மாற்றப்பட்டால் நமது எதிரி யார்? முஸ்லிம்.
இந்தியாவில் பாபர் மட்டும்தான் இஸ்லாமியராக வந்தார். இங்கு உள்ளவர்கள்தான் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள். இங்கே பிறந்து வளர்ந்தவர்கள்தானே முஸ்லிம் ஆனார்கள்.
முகலாயர்கள் ஆட்சி இங்கே உருவாவதற்கு முன்பாகவே அரேபியர்கள் மலபார் பகுதிக்கு வந்து சென்றுள்ளார்கள். இந்த வரலாறு எல்லாம் ஆளுநர் ரவிக்குத் தெரியாது. இவருக்கு மட்டும் இல்லை. தமிழ்நாட்டில் மூன்று உளறல் மன்னர்கள் இருக்கிறார்கள். ஒருவர், ஆர்.என்.ரவி. இரண்டாவது, அண்ணாமலை. மூன்றாவது சீமான்.
இந்த மூவரும் எப்போது என்ன பேசுகிறார்கள் சொல்லவே முடியாது. என்ன உளறுவார்கள் என்றும் சொல்ல முடியாது" என்கிறார்.












Click it and Unblock the Notifications