Palani Land Scam: சீரியஸ் கண்டிஷனில் ஜஸ்டின் மணிகண்டன்? இரவோடு இரவாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!
மதுரை: பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை கொண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட ஜஸ்டின் மணிகண்டன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6ஆம் தேதி ரூ. 2 கோடிக்கு பத்திரபதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பழனி அடிவார காவல் நிலையம் சார்பில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின் ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. பின் திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் பழனி கோவிலில் இருந்து ஆவணங்களைப் பெற்று விசாரணையை விசாரணையை தொடங்கினார்.

பழனி நில மோசடி
நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளம் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி புதூரைச் சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்ருதீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி அன்வருதீன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து இருந்தனர்.
ஜஸ்டின் மணிகண்டன்
இந்த வழக்கில் முக்கிய நபரான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இதை அடுத்து தலைமறைவான ஜஸ்டின் மணிகண்டனை நேற்று கொடைக்கானலில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். நேற்று இரவு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் ஏற்பாடுகளை சிபிசிஐடி போலீசார் செய்து வந்தனர். அப்போது திடீரென ஜஸ்டின் மணிகண்டனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ரத்த அழுத்தம்
ஜஸ்டின் மணிகண்டனுக்கு மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்ததால் அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு சர்க்கரை அளவு அதிகரித்தாலும், ரத்த அழுத்தம் அதிகரித்ததாலும், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நீதிமன்ற காவல்
இந்நிலையில் திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்று நீதிபதி பாக்கியராஜ் மருத்துவமனைக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டன் சிகிச்சை பெற்றுதை நேரில் பார்வையிட்டார். பின்னர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு வருகின்ற 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். ஜஸ்டின் மணிகண்டன் உடல்நிலை சரியாகும் வரை நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் எனவும் சிபிசிஐடி போலீசார் கூறியிருந்தனர்.
மதுரை ராஜாஜி மருத்துவமனை
இந்த நிலையில் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சை பெற்று வந்த ஜஸ்டின் மணிகண்டன் திடீரென மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜஸ்டின் மணிகண்டனுக்கு ரத்த அழுத்தம், உயர் சர்க்கரை ஆகியவை இருந்த நிலையில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
சிபிசிஐடி
இதை அடுத்தே அவர் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம் அடைந்த நிலையில் தற்போது ஜஸ்டின் மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
