பான் கார்டு + ஆதார் கார்டு இருக்குல்ல.. ஒரேநாள் தான் இருக்கு.. இல்லாட்டி டபுள் மடங்கு காசு போயிரும்
சென்னை: பான் கார்டுடன் ஆதார் எண்ணை வருகிற 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, ஆதார் கார்டுகள், மிக முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது.. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) இந்த கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஆதார் கார்டு: ஏதேனும் முக்கிய இடங்களுக்கு செல்லும்போதும் சரி, எந்த ஒரு அலுவலை துவங்குவதானாலும் சரி ஆதார் கார்டுகளே அவசியமாகின்றன.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று இப்போது ஆகிவிட்டது.
வங்கி கடன் துவங்குவது முதல் வங்கிக்கடன் பெறுவது வரை ஆதார் கார்டு வைத்திருந்தால்தான் சாத்தியம்.. எந்த ஒரு இடத்திலும் அடையாள சான்றாக ஆதார் கார்டு கேட்கப்படுகிறது. இதில் பான் கார்டுகளையும் சேர்த்து கொள்ளலாம். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
காலக்கெடு: பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, பலமுறை நீட்டிக்கப்பட்டு, இறுதியாக, கடந்தாண்டு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.. அதற்கு பிறகு, பான் - ஆதார் இணைப்புக்கு, தாமத கட்டணமாக 1,000 ரூபாய் விதிக்கப்பட்டது... அவ்வாறு இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலற்றதாகி விடும் என்ற எச்சரிக்கையையும் வருமான வரித்துறை விடுத்திருந்தது.
இந்நிலையில், வருமான வரித்துறை மீண்டும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: வரி செலுத்துவோர், தங்களின் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை வருகிற 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இணைக்க தவறும்பட்சத்தில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வரி தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் ஜூன் 31ம் தேதியாகும்.
வருமான வரித்துறை: அதிக விகிதத்தில் வரி விலக்குகளை தவிர்க்க வரும் 31ம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் (டிடிஎஸ் பொருந்தக்கூடிய விகிதத்தில் 2 மடங்கு)" என்று வருமான வரித்துறை அலர்ட் செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications