PAN Card: பான் கார்டில் பஞ்சாயத்தா? உடனே பெயர், முகவரியை மாத்தனுமா? ஆன்லைனில் திருத்தம் செய்வது எப்படி?
சென்னை: வங்கி, வருமான வரி சேவை மட்டுமல்லாது பல்வேறு முக்கிய அரசின் சேவைகளை பெறுவதற்கும் கடன் பெறுவதற்கும் பான் கார்டு மிக முக்கியமாக உள்ளது. இந்நிலையில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், புகைப்படம் மாற்றம் அல்லது அதில் ஏதேனும் பிழை இருந்தால் ஆன்லைனிலேயே மாற்றுவது எப்படி என பார்க்கலாம்..
பான் கார்டு ( PAN Card - Permanent Account Number Card) என்பது இந்திய வருமானவரி துறையால் (Income Tax Department of India) வழங்கப்படும் ஒரு தனிப்பட்ட அடையாள அட்டை ஆகும். இது ஒரு 10 இலக்க அடையாள எண் கொண்ட அட்டை. இந்த எண் உங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
பான் கார்டு, வங்கிகளில் கணக்கு துவக்க, வருமான வரி செலுத்த, பங்கு வாங்க, கடன் பெற, மற்றும் அதிக தொகையினை வங்கி மூலம் பரிமாற்றங்கள் செய்யும் போது அவசியமாகும். பான் கார்டு இல்லாமல் நீங்கள் பெரிய பண பரிமாற்றம், சேமிப்புத் திட்டங்கள், IPO முதலியவற்றை செய்ய முடியாது.

பான் கார்டு திருத்தம்
வங்கி மற்றும் நிதி நடவடிக்கைகள், பெரிய பண பரிமாற்றங்கள், சொத்து வாங்கும் போது பான் கார்டு இருந்தால் தான் வேலைகள் எளிதாக நடக்கும். அரசு திட்டங்களில் நன்மைகள் பெறுவதற்கும் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. பான் கார்டில் நமது பெயர், பிறந்த தேதி, பாலினம், தந்தையின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் போன்ற விவரங்கள் இடம்பெறும். இதன் மூலம் நமது அடையாளம் உறுதிப்படுத்தப்படுகிறது.
வருமான வரி
சுருக்கமாகச் சொல்வதானால், பான் கார்டு வருமான வரி தொடர்பான அடையாள அட்டை மட்டுமல்ல.. வங்கி, அரசு, மற்றும் நிதி சேவைகளை எளிதாக பெற உதவும் மிக முக்கிய ஆவணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பான் கார்டில் உள்ள விபரங்களை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியம். ஒருவேளை பான் கார்டில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் அதனை உடனே செய்ய வேண்டும். இதற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. ஆன்லைனிலேயே பான் கார்டுகளில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அதனை எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்..
ஆன்லைன் பான் மாற்றம்
புதிய பான் கார்டு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய http://onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். தொடர்ந்து அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'Application Type' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து 'Changes or Correction in Existing PAN card' என்பதைத் தேர்வு செய்யவும். அடுத்து, பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை இந்தப் பக்கத்தில் பூர்த்தி செய்யவும்.
NSDL பான் சேவை
பின்னர் உங்கள் இ-மெயில் எண்ணிற்கு டோக்கன் எண் அனுப்பபடும். அதை சேமித்து வைக்கவும். உங்கள் Token எண் இ-மெயிலுக்கு அனுப்பப்படும் என்பதால் Email ID யை சரியாக கொடுக்க வேண்டும். தொடர்ந்து விண்ணப்ப பக்கம் சென்று அடையாளச் சான்று, முகவரி சான்று மற்றும் டிஜிட்டல் கையெழுத்து உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் எல்லாம் பூர்த்தி செய்தப் பின் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய அட்டை
இதற்கு சேவை கட்டணமாக ரூ.110 செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பித்தால் உங்கள் PAN Cardல் திருத்தம் செய்யப்பட்டு புதிய அட்டை வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நடைமுறைகளை சரியாக பின்பற்றி, உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்தாலே எவ்வித சிக்கலுமின்றி திருத்தப்பட்ட பான் கார்டு உங்கள் வீட்டுக்கே வந்துவிடும்.












Click it and Unblock the Notifications