பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி!
சென்னை: பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய்யை சந்திக்க விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் மற்றொரு பிரம்மாண்டமான விமான நிலையம் காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ள விமான நிலைய ஆணையம், முழுமையான தரவுகளுடன் விஜய்யை சந்திக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சென்னையின் 2வது விமான நிலையமான பரந்தூர் விமான நிலையம் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. திமுக ஆட்சியின் போதே இதற்கான தொடக்க பணிகள் வேகமாக நடந்தன. அரசு நிலம் போக, 3,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடந்தன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,700 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் தவெக பெரும் வெற்றியை பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. தவெக தலைவர் விஜய் தனது கள அரசியலை பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்பில் இருந்துதான் தொடங்கினார். பரந்தூரில் விமான நிலையம் வராது என்ற உறுதியை விவசாயிகளுக்கு விஜய் கொடுத்தார். தற்போது ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
அந்த ஆலோசனையில் கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் நிலம் கையகப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதன் அவசியம் குறித்து விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய ஆய்வறிக்கையை விமான நிலைய ஆணைய அதிகாரிகள் முதல்வர் விஜய்யை சந்தித்து சமர்ப்பிக்க உள்ளனர். இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், தமிழ்நாட்டில் விமான பயணியரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அதன் வளர்ச்சியை சமாளிக்க போதுமான கட்டமைப்புகள் இல்லை.
பல சர்வதேச நாடுகளுக்கு நேரடி விமான சேவைகள் இயக்க முடியவில்லை. இதனால் சென்னையில் 2வது விமான நிலையம் என்பது காலத்தின் கட்டாயம். அதற்காகவே பரந்தூர் விமான நிலையத்தை பரிந்துரைத்துள்ளோம். பரந்தூரில் அதிநவீன ஓடுபாதைகள், அகலமான வான்வெளித் தளங்கள் அமைக்கப்பட உள்ளதால், பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பரந்தூரில் இருந்து அமெரிக்கா மற்றும ஐரோப்பா நாடுகளுக்கு விமானங்களை இயக்க முடியும். அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஆணையம் சார்பாக இந்த திட்டத்திற்கான நில அமைப்பியல், சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் போக்குவரத்து இணைப்பு குறித்த ஆய்வுகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் விமான நிலையத்தை சுற்றி ஒரு ஏரோட்ரோபோலிஸ் கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலமாக சரக்கு போக்குவரத்து மற்றும் வர்த்தக பரிமாற்றங்கள் பல மடங்கு உயரும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இதன் முழுமையான தரவுகளுடன் முதல்வர் விஜய்யை சந்திக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications