பரந்தூர் விமான நிலையத் திட்டம் என்னாச்சு? ஒரே நாளில் ரூ.1,000 கோடி சாத்தியமா? கணக்கு கேட்ட காந்தராஜ்
சென்னை: அண்ணா, ராஜாஜி, கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்கள் அமர்ந்த இடத்தில் இன்று விஜய் அமர்ந்திருக்கிறார். ஆனால் "பெரியாரை ஏற்றுக்கொள்வேன், ஆனால் அவரின் கடவுள் மறுப்பை ஏற்க மாட்டேன்" என்று சொல்வது முற்றிலும் முரண்பாடான, தெளிவற்ற அரசியல் நிலைப்பாடாகும்" என்று மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
Tamil Niram சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சியில் எந்தவிதமான சாதனைகளோ, புதிய திட்டங்களோ அல்லது தொழிற்சாலைகளோ உருவாக்கப்படவில்லை. மக்களுடைய தனிநபர் வாழ்க்கைத் தரத்திலும் எந்தவிதமான நேர்மறையான மாற்றமும் நிகழவில்லை.

1 லட்சம் கோடி முதலீடு
1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திருப்பதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.. ஆனால் அதற்கான முறையான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. புதிய தொழிற்சாலைகளோ, கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் சீரமைப்புகளோ நடைபெறவில்லை.
சுதந்திர தினத்தன்று கோட்டையில் முதலமைச்சர் கொடியேற்றுவதை மிகப்பெரிய சாதனையாகக் காட்டுகிறார்கள். மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை போராடிப் பெற்றுத் தந்தவர் கலைஞர் கருணாநிதி. அதை அன்றே எம்.ஜி.ஆரும் பாராட்டியிருக்கிறார் என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
நாகரீகமாக மறைக்கிறார்கள்
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேட்கும் எந்தவொரு கேள்விக்கும் முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ நேரடியான பதில்களை தருவதில்லை. "தங்களுக்குப் பதில் தெரியாது" என்பதை நாகரிகமாக மறைத்துப் பேசுகிறார்கள்.
அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு நயம்படவும் சாதுரியமாகவும் பதிலளிப்பார்கள். ஆனால், இன்றைய அமைச்சர்களும் கூட்டணிக் கட்சியினரும் தெளிவில்லாமல் உளறி மாட்டிக்கொள்கிறார்கள். கட்சியின் கவுரவம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, அவர்கள் பேசும் தேவையற்ற, முதிர்ச்சியற்ற பேச்சுகளைச் சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் காப்பாற்றுகிறார்.
மேக்கப் - அழகு - முதலமைச்சர்
ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல், தங்களின் தோற்றத்தையும் மேக்கப்பையும் அழகையும் ரசிப்பதிலேயே நேரத்தைச் செலவிடுகிறார்கள். வெளிப்புற அலங்காரத்தையும் விளம்பரங்களையும் பார்த்துத் தான் மக்கள் ஏமாறுகிறார்கள்... இதில் எந்தவிதமான உண்மையான கன்டென்ட்டும் இல்லை. கவர் மட்டுமே உள்ளது.. அதாவது விஜய்க்கான ஆதரவு என்பது வெறும் தோற்றத்தை பார்த்து மட்டுமே கொடுக்கப்படுகிறது.
திரிஷா பற்றி சட்டமன்றத்தில் பேச்சு எழுந்தபோது, அது தேவையில்லாத ஒரு விவாதமாகவே மாறியது. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல், நடிகைகளை பற்றியும் சினிமா பற்றியும் பேசுவது அவையின் கண்ணியத்தை குறைக்கும் செயலாகும். இது போன்ற தனிப்பட்ட பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டிய சூழலை உருவாக்குகின்றன.
கரண்ட் பில், சொத்து வரி
கரன்ட் பில்லும் சொத்துவரியும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. பணவீக்கம் காரணமாக ரூபாயின் மதிப்பு பெருமளவில் குறைந்துவிட்டது. "முன்பு சரியாக வசூலிக்கவில்லை, இப்போதுதான் வசூலிக்கிறோம்" என்று கூறும் அதிகாரிகளின் தவறுகளுக்கு, ரெய்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசு நிர்வாகமும் பொருளாதாரமும் சீராகும்.
சட்டமன்றத்தில் "தென்னிந்தியாவிலிருந்து ஒரு பிரதமர் வர வேண்டும்" என்று பேசுகிறார்கள். ஆட்சி நிர்வாகத்தைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள் முதலமைச்சர் ஆக நினைக்கும் போது, மோடியை பார்த்து நாமும் ஏன் பிரதமராகக் கூடாது என்ற எண்ணம் வருவது இயல்பு தான்.
ஊடகங்களும் தவெகவின் கொள்கையற்ற செயல்பாடுகளுக்கு ஆதரவாக செயல்படுவது வருத்தமளிக்கிறது. அண்ணா, ராஜாஜி, கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்கள் அமர்ந்த இடத்தில் இன்று விஜய் அமர்ந்திருக்கிறார். ஆனால் "பெரியாரை ஏற்றுக்கொள்வேன், ஆனால் அவரின் கடவுள் மறுப்பை ஏற்க மாட்டேன்" என்று சொல்வது முற்றிலும் முரண்பாடான, தெளிவற்ற அரசியல் நிலைப்பாடாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
