"சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு" சிவகார்த்திகேயன், ரவி மோகனை சாடிய மாணிக்கம் தாகூர்!
சென்னை: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடக்கும் பொங்கல் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் பங்கேற்றிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. பராசக்தி குழுவினர் பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் பங்கேற்ற சூழலில், "சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு" என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாக வைத்து பராசக்தி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இது மீண்டும் இந்தி திணிப்பு தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியது.

ஆனால் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், பராசக்தி படத்திற்கு எதிராக கருத்து கூறி இருந்தார். அதேபோல் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் படத்தில் வரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பான காட்சியின் புகைப்படத்தை பதிவிட்டு கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி எடுத்தது.
அதேபோல் பராசக்தி படத்தை பார்த்த அண்ணாமலை, படத்தை வரவேற்றதோடு, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பங்கேற்றனர்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திருவாசகத்தை பாடலாக பாடி கச்சேரி நடத்தினார். பாஜகவின் நிகழ்ச்சியில் பராசக்தி படக்குழு குடும்பத்துடன் பங்கேற்றது சர்ச்சையாகி இருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடர்பான படத்தில் நடித்துவிட்டு பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், பராசக்தி படக்குழுவை சாடி இருக்கிறார். இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், "சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு.. ஆனா ஜனநாயகன் Blocked" என்று பதிவிட்டுள்ளார். இதனால் சோசியல் மீடியாவில் பராசக்தி படத்திற்கு பாஜக ஆதரவாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் பேசத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications