தமிழ்த் தீ பரவட்டும்.. தேர்தலில் திமுகவின் முரசொலியாக போகிறது பராசக்தி படம்.. கமல்ஹாசன் வாழ்த்து!
சென்னை: இந்தி திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் பராசக்தி படத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பராசக்தி படம் திமுக கூட்டணி எதிர்கொள்ளப்போகும் சட்டசபைத் தேர்தலின் மாபெரும் முரசொலியாக இருக்கப் போகிறது என்றும் கூறியுள்ளார்.
1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்டத்தை மையமாக வைத்தும், பொள்ளாச்சியில் நடந்த மொழிப்போர் படுகொலையை மையமாக வைத்தும் உருவாகி இருக்கிறது பராசக்தி திரைப்படம். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பராசக்தி திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா பேசும் ஒவ்வொரு வசனங்களும், இந்தி திணிப்புக்கு எதிராக மொழிவாரி மாநிலங்கள் போராட்டமும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல தமிழர்கள், இந்தி திணிப்புக்கு மட்டுமே எதிரானவர்கள் என்பதையும் பராசக்தி படம் உரக்க கூறி இருக்கிறது.
இன்னொரு பக்கம் இந்தி திணிப்பால் சாமானிய மக்கள் அடையும் கஷ்டங்களையும் தொட்டு சென்றுள்ளது. இதனால் சோசியல் மீடியாவில் தீ பரவட்டும் என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் பராசக்தி படக்குழுவுக்கு நடிகரும், எம்பியுமான கமல்ஹாசன் வாழ்த்து கூறி கடிதம் எழுதி இருக்கிறார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில், தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, பின்குறிப்பு: பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது முதல் பாராட்டு இந்த பயோஃபிக் ஷன் கதையையும், இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும் இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.
இந்தச் சினிமா சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications