விஸ்வரூப வெற்றி பெற்ற திமுக.. தூரத்தில் வரும் அதிமுக! எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு ஸ்ட்ரைக் ரேட்
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப். 19ஆம் தேதி சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
அதில் மொத்தம் 60.07% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், நேற்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

விஸ்வரூப வெற்றி
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி விஸ்வரூப வெற்றியைப் பெற்றுள்ளது. சென்னை தொடங்கி நாகர்கோவில் வரை இருக்கும் மொத்தம் 21 மாநகராட்சிகளையும் திமுக வென்றுள்ளது. அதேபோல மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளை அப்படியே அள்ளியுள்ளது திமுக கூட்டணி. பேரூராட்சிகளைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 490 பேரூராட்சிகளில் குறைந்தது 430இல் திமுக வென்றுள்ளது. வார்டு வாரியாக பார்க்கும் போது திமுக கூட்டணியின் சராசரி ஸ்ட்ரைக் ரேட் 69%ஆக உள்ளது.

கொங்கு மண்டலத்தில் திமுக கொடி
தமிழ்நாட்டில் கடந்த. ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்த கொங்க மண்டலத்திலும் திமுக கலக்கல் வெற்றியைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த தேர்தலில் திமுக வாஷ் அவுட் ஆன கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மாநகராட்சியில் திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மையே கிடைத்துள்ளது. இதன் மூலம் கோவை மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக திமுகவைச் சேர்ந்த ஒருவர், அதிலும் குறிப்பாகப் பெண் நிர்வாகி ஒருவர், கோவை மேயராகப் பொறுப்பேற்கும் சிறப்பு நடக்க உள்ளது.

அடுத்து வந்த அதிமுக
இந்தத் தேர்தலில் திமுகவை எதிர்த்துக் களமிறங்கிய அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 2ஆம் பேரண்டத்தைப் பிடித்துள்ள நிலையில், தனித்துக் களமிறங்கிய பாஜக கூட கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பாமக, அமமுக, தேமுதிக மிகவும் குறைவான இடங்களில் மட்டுமே வென்றுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கம்பேக் தரும் என எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் ஒரே ஏமாற்றமே.

76% திமுக கூட்டணி
தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் மாநகராட்சிகளை அனைத்தும் திமுக கைப்பற்றியுள்ளது. 12 மாநகராட்சிகளில் காஞ்சிபுரத்தில் ஒரு வார்டில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர் உயிரிழந்ததால் அங்கு மட்டும் தேர்தல் நடத்தவில்லை. அது தவிர மொத்தம் 1373 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதில் திமுக கூட்டணி 1062 வார்டுகளில் வென்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இது ஒட்டுமொத்த வார்டுகளில் சுமார் 76% ஆகும். குறிப்பாக திமுக மட்டும் 952 வார்டுகளில் வென்றுள்ளது. இது ஒட்டுமொத்த வார்டுகளில் 69.29% ஆகும். திமுகவைத் தொடர்ந்து அதிமுக 11.94% ஸ்ட்ரைக் ரேட்டில் 164 வார்டுகளில் வென்றுள்ளது. அடுத்து பாஜக 1.60% ஸ்ட்ரைக் ரேட்டில் 22 வார்டுகளில் வென்றுள்ளது.

நகராட்சியில் திமுக கூட்டணி ஸ்ட்ரைக் ரேட் 67%
நகராட்சிகளைப் பொறுத்தவரை மொத்தம் 3842 வார்டுகள் உள்ள நிலையில், அதில் 2571 வார்டுகளை அள்ளியுள்ளது திமுக கூட்டணி! இது ஒட்டுமொத்த வார்டுகளில் 67% ஆகும். குறிப்பாக திமுக மட்டும் ஒட்டுமொத்த வார்டுகளில் 61.41% வார்டுகள், அதாவது 2360 வார்டுகளில் திமுக கைப்பற்றி உள்ளது. அதைத் தொடர்ந்து அதிமுக 632 வார்டுகளில் வென்றுள்ளது. அதிமுகவின் ஸ்ட்ரைக் ரேட் 16.60%ஆக உள்ளது. தனித்துக் களமிறங்கிய பாஜக 41 வார்டுகளில், அதாவது 1.07% ஸ்ட்ரைக் ரேட்டில் வென்றுள்ளன. தேமுதிக 0.31% வார்டுகள், அதாவது 12 வார்டுகளில் வென்றுள்ளது.

பேரூராட்சிகளில் என்ன நிலை
தமிழ்நாட்டில் மொத்தம் 7603 பேரூராட்சி வார்டுகள் உள்ள நிலையில், அதில் திமுக கூட்டணி 4880 (64%) வார்டுகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது. அதிகபட்சமாக 4388 வார்டுகளில், அதாவது 57.28% வார்டுகளில் திமுக வென்றுள்ளது. அதைத் தொடர்ந்து, 15.82% ஸ்ட்ரைக் ரேட்டில் அதிமுக, 1206 வார்டுகளில் வென்றுள்ளது. இவை தவிர பாஜக 3.02% ஸ்ட்ரைக் ரேட்டில் 230 வார்டுகளில் வென்றுள்ளது. கடந்த 2011இல் மாநில எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக வெறும் 23 வார்டுகள், அதாவது 0.30% வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது.












Click it and Unblock the Notifications