வந்தே பாரத் ரயிலா இது.. பழைய டவுன் பஸ் மாதிரி.. சொட்ட சொட்ட நனைய வைத்த ஏசி.. திண்டாடிய பயணிகள்
சென்னை: டெல்லி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் ஒரு பெட்டியில் மழை பெய்தது போல் தண்ணீர் விழுந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இது தொடர்பாக பயணி ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஏசி வேலை செய்யவில்லை. தண்ணீர் கசிகிறது. இவ்வளவு கட்டணம் செலுத்தியும் வந்தே பாரத் ரயில் முற்றிலும் அசவுகரியமாக உள்ளது என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வரும் இந்த வீடியோவுக்கு ரயில்வே அமைச்சகமும் பதில் அளித்துள்ளது. பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரயில்களில் பல சொகுசு வசதிகள் இருக்கின்றன. இதனால் பயணிகளும் கட்டணம் அதிகம் இருந்தாலும் இதில் பயணம் செய்யவே விரும்புகின்றனர். இந்த நிலையில் தான் ஏசியில் இருந்து மழைபோல் தண்ணீர் ஒழுகியது பயணிகளை அவதியடைய செய்துள்ளது.

வந்தே பாரத் ரயில்
நாடு முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை அதி நவீன வசதிகள் கொண்ட ரயிலாக அறியப்படுகிறது. முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், பயோ டாய்லட்கள் என பல்வேறு சொகுசு வசதிகள் இந்த ரயிலில் உள்ளது.
இதனால், கட்டணம் அதிகம் என்றாலும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள். பிற எக்ஸ்பிரஸ் ரயில்களை விட வந்தே பாரத் ரயிலின் வேகம் அதிகம் என்பதால், பயணிகளுக்கு ஒரு சில மணி நேரங்கள் பயணத்தில் மிச்சம் ஆகும் என்பதால் கட்டணம் அதிகம் என்றாலும் இந்த ரயில்களில் பயணிகள் விரும்பி பயணம் செய்கிறார்கள்.
மழை போல் கொட்டிய தண்ணீர்
இந்த நிலையில்தான் டெல்லி நோக்கி வந்த வந்தே பாரத் ரயிலில் ஏசியில் இருந்து நீர் கசிந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். திடீரென ஒழுகிய தண்ணீரால் பயணி ஒருவர் சொட்ட சொட்ட நனைந்துள்ளார். ஏசியில் இருந்து தண்ணீர் மழை போல் விழுவது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின்றன. பயணி ஒருவர் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அந்த பயணி கூறியிருப்பதாவது:-
ஏசி வேலை செய்யவில்லை. தண்ணீர் கசிகிறது. இவ்வளவு கட்டணம் செலுத்தியும் வந்தே பாரத் ரயில் முற்றிலும் அசகவுரியமாக உள்ளது. பலமுறை புகார் அளித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. உடனடியாக ரயில்வே அமைச்சகம் இதில் தலையிட வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பயணிகள் பலரும் பகிர்ந்து வந்தே பாரத் ரயிலின் பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
பயணிகள் ஆதங்கத்துடன் கோரிக்கை
மேலும் அந்த பயணத்திற்கான முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே, பயணியின் அந்த ட்விட்டிற்கு ரயில்வே உடனடியாக பதிலளித்துள்ளது. இது குறித்து ரயில்வே சேவா தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- "ஏசியின் டிரிப் டிரேவில் அடைப்பு இருப்பதால் இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆயிரம் டிக்கெட் கட்டணம் வசூலித்தும் வந்தே பாரத் ரயிலில் போதிய பராமரிப்பு சமீப காலமாக இல்லை என்று பயணிகள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் கூறுகையில், பழைய டவுன் பஸ்களை போல வர வர வந்தே பாரத் ரயில்கள் மாறிவருவதாகவும் டிக்கெட் கட்டணத்திற்கு ஏற்ப பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரயிலை உயர் தரத்துடன் பராமரிக்க வேண்டும் என்றும் பயணிகள் முன்வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications