பசும்பொன்னில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி.. சென்னையில் விஜய் மரியாதை.. தேவர் குருபூஜை இன்று

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் விஜய் சென்னையிலும், முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பசும்பொன்னிலும் தேவருக்கு மரியாதை செலுத்த உள்ளனர். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனும் பசும்பொன் வருகை தர உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று தமிழக அரசியல் களத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடைபெற உள்ளன?

விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மீகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழாவும், 64-வது குருபூஜையும் இன்று (அக்.30) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவரின் சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

Thevar Jayanthi Vijay Chennai Pasumpon

ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் குருபூஜை நடைபெறுவது வழக்கம். இதில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்துவார்கள்.

சென்னையில் விஜய்

இந்த ஆண்டு தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் பசும்பொன்னுக்கு நேரில் சென்று தேவருக்கு மரியாதை செலுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், இந்த ஆண்டு பசும்பொன்னில் நடைபெறும் குருபூஜையில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கமாட்டார் என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னையிலேயே அவரது சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்த உள்ளார். நந்தனம் சிக்னல் அருகே அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

பசும்பொன்னில் துணை ஜனாதிபதி

இதற்கிடையே, தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மதுரை வருகிறார். காலை 8.50 மணிக்கு விமானம் மூலம் மதுரை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் செல்கிறார். காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் காலை 10.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு காலை 11.10 மணிக்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து மதுரை திரும்பும் துணை ஜனாதிபதி, அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். மாலை 4 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, மாலை 5 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுகிறார்.

ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள்

இதேபோல், தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்துள்ளார்.

இன்று காலை 8 மணிக்கு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து கார் மூலம் பசும்பொன் செல்கிறார். அங்கு தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பசும்பொன் சென்று தேவருக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

மேலும், தமிழக ஆளுநர் அர்லேகர் மற்றும் அரசு சார்பில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பல்வேறு இடங்களில் நடைபெறும் மரியாதை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. துணை ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை தருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 டிஐஜிக்கள், 40 எஸ்.பி.க்கள் தலைமையில் சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், மதுரை முதல் ராமநாதபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இரு மாவட்ட ஆட்சியர்களும் பிறப்பித்துள்ளனர்.

சென்னை நந்தனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முதலமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+