பட்டா, சிட்டா ஆவணம் பயன்பாடு.. சிட்டாவில் பெயர், அளவு, விவரங்கள் மாற்ற முடியுமா? ஆன்லைனில் ஈஸி வசதி
சென்னை: பொதுவாக பட்டா ஆவணங்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்வது போலவே, மனை குறித்து பட்டாவில் உள்ள விவரங்களுக்கு, சிட்டாவிலும், உள்ள தகவல்கள் பொருத்தமாக இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? சிட்டா என்பதன் முக்கியத்துவம் என்ன? சிட்டா ஆவணம் இல்லாவிட்டால் என்னாகும்? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
அந்தவகையில், சிட்டா என்றால் என்ன? சிட்டாவின் முக்கியத்துவம் என்ன? சிட்டா பெறுவதற்கு எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

சொத்து வைத்திருப்போர் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணங்களில் பட்டா முக்கிய இடம் பிடிக்கிறது. பட்டாவில் உள்ள அடிப்படை தகவல்களுடன் கூடுதல் விவரங்கள் சேர்த்து இடம்பெறும் வருவாய்த்துறை ஆவணமே சிட்டா ஆகும்.
சிட்டா ஆவணம் என்பது என்ன
சிட்டாவில், குறிப்பிட்ட நிலம் எங்கு அமைந்துள்ளது, அதன் பரப்பளவு எவ்வளவு, நிலத்தின் உரிமையாளர் யார், நிலத்தின் வகை நஞ்சையா அல்லது புஞ்சையா, நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா வகை, நிலம் தற்போது பயன்பாட்டில் உள்ளதா என்பது போன்ற மொத்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும்..
சுருக்கமாகச் சொன்னால், ஒரு நிலத்தின் பரப்பளவு, பயன்பாடு மற்றும் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை காட்டும் வருவாய்த்துறை ஆவணமே சிட்டா ஆகும்...
கடந்த 2015ம் ஆண்டிலிருந்து பட்டா மற்றும் சிட்டா ஆகிய 2 ஆவணங்களும் இணைக்கப்பட்டு, ஒரே ஆவணமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பட்டா-சிட்டா, அடங்கல் சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைன் மூலமாகவும் பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
சிட்டாவில் பெயர் மாற்றம்
எனவே பட்டாவை போலவே சிட்டாவின் தேவையும் அவசியமாகும்.. வங்கிகள் மூலம் சொத்தின் பேரில் கடன் பெறுவதற்கு, சொத்தின் உரிமை, அளவு மற்றும் இருப்பிடத்தை உறுதி செய்ய பட்டா-சிட்டா ஆவணம் அவசியமாகிறது. அதேபோல், விவசாய நிலம் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டால் அதற்கான இழப்பீடு பெறவும், அரசு நிலத்தை உபயோகத்திற்காக எடுத்துக்கொண்டால் இழப்பீடு தொகை பெறவும், இந்த ஆவணம்தான் கண்டிப்பாக தேவை,..
அதேபோல விவசாய நிலம் அல்லது கட்டிடத்துடன் கூடிய இடத்தை விற்பனை செய்யும் போதும் பட்டா-சிட்டா ஆவணம் கட்டாயமாக கேட்கப்படுகிறது.
சிட்டா ஆவணத்தின் அவசியம்
சிட்டா இல்லாவிட்டால், சொத்தின் உரிமையை நிரூபிப்பதில் ஏகப்பட்ட சிக்கல் ஏற்படும்... வங்கிக் கடன் பெற முடியாது, சொத்து வாங்குதல் அல்லது விற்பனை செய்யும்போது சட்ட பிரச்சினைகள் உருவாகலாம்... அரசு நலத்திட்டங்கள், இழப்பீட்டு தொகைகளைப் பெறுவதிலும் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால்தான், சிட்டா இல்லாத சொத்து சட்ட ரீதியாக பலவீனமானதாக கருதப்படுகிறது.
ஒருவேளை, சிட்டாவில் உள்ள விவரங்களில் பிழை இருந்தால் அல்லது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், அதனை திருத்தம் செய்ய முடியும்.... உரிமையாளர் பெயர், தந்தை பெயர், நில அளவு, சர்வே எண், நில வகை போன்றவற்றில் திருத்தம் தேவைப்பட்டால், அருகிலுள்ள தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து, சம்பந்தப்பட்ட ஆதார ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வருவாய் ஆய்வாளர், விஏஓ ஆய்வுக்குப் பிறகு, உரிய ஒப்புதல் கிடைத்தால் திருத்தம் செய்யப்படும்.... சில மாவட்டங்களில் இந்த சேவை ஆன்லைனிலும் வழங்கப்படுகிறது.
பட்டா என்பது உரிமையைச் சுட்டும் ஆவணம், சிட்டா என்பது நில விவரங்களைச் சொல்வது, அடங்கல் என்பது பயிர் மற்றும் நிலப் பயன்பாட்டு விவரங்களை கொண்டது. தற்போது இவை அனைத்தும் பெரும்பாலும் ஒரே பதிவாக இணைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
மொத்தத்தில், சிட்டா என்பது வெறம் காகிதம் கிடையாது.. ஒரு சொத்தின் அடையாளம் மற்றும் சட்ட பாதுகாப்பிற்கான முக்கிய ஆதாரமாகும். எனவே, நிலம் வாங்கும் முன் சிட்டா-பட்டா விவரங்களை சரிபார்த்து, அவை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வது ஒவ்வொரு நில உரிமையாளரின் கடமையாகும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?
- பட்டா சிட்டா ஆன்லைன் பெற வேண்டுமானால் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் நுழைய வேண்டும்.
- பட்டா & புலப்படம் / சிட்டா / நகர நில அளவைப் பதிவேடு விவரங்களை பார்வையிடுவதற்கான ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- முகப்பு பக்கத்தில் 1) மாவட்டம், 2) வட்டம் , 3) கிராமம் 4) பட்டா /சிட்டா விவரங்களை பார்வையிட 5) அங்கீகார மதிப்பை உள்ளிடவும், 6) செல்போன் நம்பர் பதிவு செய்யவேண்டும், பின்னர் அதற்க்கு ஒடிபி OTP வரும், அதனை உறுதிப்படுத்த வேண்டும்.. மேற்கண்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- பின்னர் உங்களது உள்ளீடு தரவுகள் இயக்கப்பட்டு அதற்கான சிட்டா திரையில் தோன்றும். சிட்டா சான்றினை சரி பார்த்தபிறக, அதற்கு கீழுள்ள "Print" என்ற பட்டனை அழுத்த வேண்டும்.. இப்பொழுது சிட்டவை PDF தரவாக சேமிக்கலாம் அல்லது அச்சிட்டு கொள்ளலாம்.
பார்வையிட - சரிபார்க்க
பட்டா / சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம், நகரநில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை (www.eservices.tn.gov.in) இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப் பட்டியல்கள் விவரங்கள் போன்றவையும் டவுன்லோடு செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications