பட்டினப்பாக்கம் மீனவர் குடியிருப்பு படிக்கட்டு இடிந்து விழுந்து ஒருவர் படுகாயம்! கொந்தளிக்கும் மக்கள்!
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் படிக்கட்டு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் நம்பிக்கை நகர், முள்ளிமா நகர், நொச்சி நகர், நொச்சிக்குப்பம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் உள்ளனர். அவர்களுக்கான அரசு குடியிருப்பில் வசித்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நம்பிக்கை நகரில் உள்ள மீனவர்களின் அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பிற்கு அங்கு குடியிருப்போரின் நண்பர் இரவு 9மணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மேல்மாடியில் வசிக்கும் நண்பரை காண படிக்கட்டில் ஏறிய போது படிக்கட்டு இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தியது.
இதனால் சப்தம் கேட்டு அந்த குடியிருப்புவாசிகள் ஓடி வந்து பார்த்த போது அந்த நபர் படுகாயமடைந்திருந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். மீனவ மக்களின் வாழ்க்கையே போராட்டாமாகியுள்ளது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா வெளியிட்ட அறிக்கையில் "சென்னை பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் படி இடிந்து விழுந்து ஒருவர் காயமடைந்துள்ளார்.
பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகர் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில், மக்கள் தினம் தினம் உயிருக்கு அச்சத்துடன் வசித்து வரு வருகிறார்கள். இப்படி இருப்பில் வசிக்கும் மீனவ மக்களின் பழுதடைந்த குடியிருப்புகளை சரி செய்வதற்கு முன் வராமல், ஏழை எளிய மீனவ மக்கள் மீது அரசின் அக்கறையில்லாத போக்கினால், இன்று விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (நேற்று) இரவில் கட்டடத்தின் முதல் தளத்தில் படி இடிந்து விழுந்து ஒரு இளைஞருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற விபத்துக்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்து வருவதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
பட்டினப்பாக்கம் ஏழை எளிய மக்களின் மீனவர் பகுதி குடியிருப்புகளை சரி செய்வதற்கு முன் வராத தமிழ்நாடு அரசு 1200 கோடி ரூபாயில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு திட்டமிட்டு வருவது நகைப்புக்குரியது.
பட்டினம்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி பழுதடைந்த குடியிருப்புகளை உடனே சரி செய்ய வேண்டும். புதிய குடியிருப்பு தொடர்பாக மீனவ மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்திட வேண்டும். பட்டினம்பாக்கம் நம்பிக்கை நகரில் ஏற்பட்ட விபத்துக்கு காரணமான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பவுல்ராஜ் என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் மேல் வீட்டில் இருக்கிறேன், என்னை பார்க்கத்தான் திருவிழாவுக்காக எனது நண்பர் வந்திருந்தார். அவர் மேலே ஏறி வரும் போது படிக்கட்டு இடிந்த விழுந்துவிட்டது.
இந்த சம்பவம் இரவு 9 மணிக்கு நடந்தது, இப்போது மணி 11.45 ஆகிறது. திருச்சியில் வண்டி பிடித்து வந்திருந்தால் கூட இந்த நேரத்திற்கு சென்னை வந்திருக்கலாம். ஆனால் சென்னையிலேயே இருந்து மயிலாப்பூருக்கு இதுவரை தவெக அமைச்சர்களோ, அதிகாரிகளோ யாரும் வரவில்லை.
எங்களை எந்த அரசாங்கமும் மனிதனாகவே மதிப்பதில்லை. தலைமைச் செயலகத்தை ரூ 1200 கோடியில் பிளான் போட்டு, அரசாணை போட தெரியும் போது இது போல் சிதிலமடைந்துள்ள மீனவ குடியிருப்புகளை சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.
எங்களுக்கு சோறே (சிதிலமடைந்த வீடு) இல்லை, ஆனால் நீங்கள் பிரியாணிக்கு (புதிய தலைமைச் செயலகம்) ஆசைப்படுறீங்க! ஜார்ஜ் கோட்டைக்கு என்ன ஆனது, இந்த ஆட்சி என்றில்லை , எந்த ஆட்சியிலும் எங்களை யாரும் கவனிப்பதில்லை, ஆனால் சொல்லும் போது மட்டும் புதிய குடியிருப்பு கட்டித் தருவதாக சொல்வார்கள்.
எம்எல்ஏவிடம் சொல்லலாம் என்றால் அவரது நம்பரை தேடும் வகையில் உள்ளது. கிடைத்த நம்பருக்கு போன் போட்டால் கிடைக்கவில்லை. இது மக்களாட்சி இல்லை, மன்னராட்சி! வீடு சிதிலமடைந்து இருக்கு, வேறு இடத்திற்கு போங்கள் என அரசு சொல்கிறது. ஏன் அந்த வீட்டை சரி செய்து கட்டி தரவேண்டியதுதானே என அந்த நபர் கேள்விஎழுப்பியுள்ளார்.



Click it and Unblock the Notifications
