புலம்பும் முதியோர்! உதவித்தொகையில் அலட்சியம்.. பாஜகவை காப்பாற்றுகிறதா விஜய் அரசு?
சென்னை: தமிழகம் முழுவதும் இந்த மாதம் முதியோர் உதவித்தொகை சரியான நேரத்தில் விடுவிக்கப்படாததால், முதியோர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். வாழ்வாதாரத்திற்கு இருக்கும் ஒரே வழி இந்த உதவித்தொகைதான். இதை கூட.. சரியான நேரத்தில் கொடுக்கலனா எப்படி? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1,000 முதியோருக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்த உதவித்தொகை விடுவிக்கப்படும். ஆனால், இந்த மாதம் ஒப்புதல் கிடைக்க தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க மத்திய அரசுதான் காரணம். இப்படி இருக்கையில், இந்த விஷயத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசை முதலமைச்சர் விஜய் காப்பாற்றுகிறாரோ? என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

முதியோர் உதவித்தொகை யாருடையது?
உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் பெயர் என்னவோ 'தேசிய சமூக உதவி திட்டம்தான்' ஆனால், இதற்கான நிதியில் பெரும் அளவை மாநில அரசுதான் கொடுக்கிறது. 60 வயதை தாண்டிய ஆதரவற்ற முதியோருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதில் ரூ.200 மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. தமிழக அரசு ரூ.800ஐ கொடுக்கிறது. இதுவே 80 வயதை தாண்டி முதியோருக்கு ரூ.500 மத்திய அரசும், ரூ.500 மாநில அரசும் பிரித்து கொடுக்கின்றன. ஆனால், ஒப்பீட்டளவில் 60 வயதை தாண்டிய முதியவர்கள்தான் அதிகம். அப்படியெனில் மாநில அரசின் பங்களிப்புதான் ஜாஸ்தி.
யாரால் தாமதம்?
மத்திய அரசின் தொகை குறைவாக இருந்தாலும், அவர்களது பொது நிதி நிர்வாக முறை(PFM/SNA) தொழில்நுட்பக் கட்டமைப்புடன் இத்திட்டம் இணைக்கப்பட்டிருப்பதால், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே ஒட்டுமொத்த தொகையையும் மாநில அரசால் விடுவிக்க முடிகிறது.
அந்த வகையில் இந்த மாதம் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், இந்த நிதியை ஆய்வு செய்து ஒப்புதல் கொடுக்க லேட் ஆகிவிட்டது. செப்.11-14 வரை மத்திய அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்ததும், ஓய்வூதியம் வழங்கும் புதிய சாப்ட்வேர் மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப பணிகள் காரணமாகவும் இந்த தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
அதிருப்தியில் முதியோர்
குறிப்பிட்ட நேரத்தில் பணம் வராததால், உணவுக்கு கூட பணம் இல்லாமல் முதியோர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர். மகன்/மகள்களால் கைவிடப்பட்டு, குடிசை வீட்டில்.. ஒரு நாள் சாப்பிட்டும், ஒரு நாள் சாப்பிடாமலும் முதியோர்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இதற்கிடையில் இந்த ரூ.1,000 என்கிற சொற்ப பணம்.. பெரிய அளவுக்கு அவர்களுக்கு பயன்படுவதில்லை. இருந்தாலும், அவசரத்திற்கு மருத்துவமனைக்கு போகவோ.. மருந்துகளை வாங்கவோதான் பயன்படுகிறது.
கடன் வாங்கி வந்து புகார்
இந்த அவசர தேவைக்கு கூட பணம் கிடைக்காமல், அவர்கள் படும் கஷ்டம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. குறிப்பிட்ட தேதியில் முதியோர் பணம் விடுவிக்கப்படவில்லை என்பதால், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுவர.. ரூ.200 கடன் வாங்கி ஒரு முதியோர் தம்பதி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருக்கும் சம்பவம் புதுக்கோட்டையில் நடந்திருக்கிறது.
பாஜகவை காப்பாற்றுகிறதா தவெக?
முதியோர் உதவித்தொகையை விடுவிப்பதில் ஏற்பட்ட கால தாமதத்திற்கு காரணம் மத்திய அரசுதான். அதை வெளிப்படையாக சொல்லி.. இனி இப்படியான கால தாமதம் ஏற்படக்கூடாது என்று தமிழ்நாடு வெளிப்படையாக பேசியிருக்கலாம். ஆனால், முதலமைச்சர் விஜய் அப்படி பேசவில்லை. எனில், பாஜக அரசை தவெக சாஃப்ட்டாக கையாள்கிறதா? என்கிற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
