சடசடவென சென்னையில் கொட்டிய கனமழை..ஜில்லென ஊட்டிபோல் மாறிடுச்சே! 3 மாவட்டங்களில் 2 வது நாளாக விளாசுதே
சென்னை: 2 வது நாளாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள்.
சென்னையில் இன்று காலை முதல் கோடையை மிஞ்சும் அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். இந்த நிலையில் மாலையில் வெயில் மங்கி மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்ட நிலையில், தற்போது அங்கு நல்ல கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

சென்னையில் கிண்டி, அண்ணா நகர், அம்பத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை விளாசி வருகிறது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமழிசை, பூண்டி, கடம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதன் காரணமாக வெப்பம் தனிந்து சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதேபோல் நேற்று இரவும் சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் மழை விளாசி வருகிறது.
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதேபோல் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications