பெரம்பூரில் களமிறக்கப்பட்ட "4 ஜோசப் விஜய்"களின் டெபாசிட் காலி! அப்படியே ஓபிஎஸ் போல் விஜய் சம்பவம்!
சென்னை: சென்னை மாவட்டத்திற்குள்பட்ட பெரம்பூர் சட்டசபை தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக எம்.ஜோசப், எஸ்.ஜோசப், கே.விஜய், ஜி.விஜய் ஆகியோர் களமிறங்கப்பட்ட நிலையில் அவர்களது வாக்குகள் என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில்
பெரம்பூர் தொகுதியில் விஜய் பெயரில் சொத்து வரி செலுத்தப்படவில்லை என கூறி பாமக எதிர்ப்பு தெரிவித்து அவரின் வேட்புமனுவை நிராகரிக்க கோரியது. எனினும் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டுவிட்டது. இந்த தொகுதியில் மொத்தம் 66 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

விஜய் போட்டியிடுவதால் இந்த பெரம்பூர் தொகுதி நட்சத்திர தொகுதியாகியிருக்கிறது. அத்துடன் விஐபி தொகுதியிலும் ஒன்றாகிவிட்டது. தவெக தலைவர் ஜோசப் விஜய் என்ற பெயரில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரை எதிர்த்து ஜோசப் என்ற பெயரில் இருவரும், விஜய் என்ற பெயரில் இருவரும் போட்டியிட்டனர்.
பொதுவாக மக்களுக்கு குழப்பத்தை விளைவிக்க ஒரு வேட்பாளருக்கு எதிராக இது போல் ஒரே பெயரில் இருப்போர் களமிறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில்தான் விஜய்க்கு எதிராகவும் களமிறக்கினர். இப்படி பெயர் ஒரே மாதிரி இருப்பதால் வாக்களிப்போர் விசில் சின்னத்தை மறந்து பெயரை தேடி, தவெக விஜய்க்கு வாக்களிப்பதாக நினைத்து சுயேச்சைக்கு அளித்துவிட்டால் அது தவெக வேட்பாளரின் வெற்றியை பாதிக்கும் என்பதுதான் அவர்களது கணக்கு.
இது போல் கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது அதிமுக அல்லாத வேறு ஒரு கூட்டணியை அமைத்து போட்டியிட்டது.
அதில் அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமைக் கழகத்தின் தலைவர் ஓபிஎஸ், பாஜக கூட்டணியில் இருந்தார். அவருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. அவரை தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக தலைமை சொன்னது.
ஆனால் அவரோ அதற்கு மறுப்பு தெரிவித்து பொது சின்னத்தில் போட்டியிட்டார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் அவர் அல்லாமல் 4 சுயேச்சைகளும் எம். பன்னீர் செல்வம் என்பவரும் களமிறக்கப்பட்டனர்.
அதாவது ஓட்டக்கார தேவர் பன்னீர் செல்வம் (ஓபிஎஸ்), ஒய்யாரம் பன்னீர் செல்வம், ஒசப்பன் பன்னீர் செல்வம், ஒச்சாத்தேவர் பன்னீர் செல்வம், ஒய்யாத்தேவர் பன்னீர் செல்வம் ஆகிய 5 பேரும் ஒரு எம். பன்னீர் செல்வமும் என 6 பேர் போட்டியிட்டனர்.
இதில் முன்னாள் முதல்வருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. வாளி சின்னம் குலுக்கல் முறையில் மதுரை வாகைக்குளத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒச்சாத்தேவர் மகனான பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் தெற்கு காட்டூரை சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வத்துக்கு கண்ணாடி டம்ளர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராமநாதபுரம் கங்கைகொண்டானை சேர்ந்த மலையாண்டி மகன் எம். பன்னீர்செல்வத்துக்கு பட்டாணி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்த தேர்தலில் ஓபிஎஸ் தோல்வி அடைந்தாலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று டெபாசிட் பெற்றார். ஆனால் மற்ற 5 பன்னீர் செல்வங்களுக்கும் டெபாசிட் தொகை காலி!
அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு எதிராக களமிறக்கப்பட்ட 2 விஜய், 2 ஜோசப்களின் டெபாசிட் காலியாகியுள்ளது. சுயேச்சைகளான ஒரு விஜய் 216 வாக்குகளையும், ஜி.விஜய் 90 வாக்குகளையும், எஸ் ஜோசப் 77 வாக்குகளையும், எம் ஜோசப் 43 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் விஜய் 1,20,365 வாக்குகளை பெற்று , 53715 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். மற்ற 4 பேரின் டெபாசிட் காலி!












Click it and Unblock the Notifications